மழை நீரை சேகரிக்க ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 245 தடுப்பணைகள் மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி தகவல்


மழை நீரை சேகரிக்க ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 245 தடுப்பணைகள் மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:30 AM IST (Updated: 25 Sept 2019 6:57 PM IST)
t-max-icont-min-icon

மழை நீரை சேகரிக்க ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 245 தடுப்பணைகள் கட்டப்பட இருப்பதாக மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.

ஈரோடு,

மழை நீரை சேகரிக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும் நீர் பாதுகாப்புக்காகவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக ஜல் சக்தி அபியான் என்ற இயக்கத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் ஈரோடு மாவட்ட பொறுப்பு அதிகாரியாக மத்திய அரசின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை செயலாளருமான டி.சி.ஏ. கல்யாணி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் மழை நீர் சேகரிப்பு குறித்து 2 முறை மாவட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். 3–வது கட்டமாக நேற்று அவர் ஈரோடு மாவட்டத்தில் ஆய்வுக்காக வந்தார். அப்போது ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும், ஈரோடு மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மழை நீர் சேகரிப்பு திட்டங்கள், குப்பை மேலாண்மை திட்டங்கள் அவருக்கு காண்பிக்கப்பட்டன.

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில், மழை நீரை நேரடியாக சேகரித்து, அதனை சுத்திகரிப்பு செய்யும் வகையில் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. முன்னோடி திட்டமாக 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் மழை நீர், தூய்மை நீராகசேகரிக் கப்படுகிறது. இந்த தொட்டியில் இருந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் பெய்த மழையில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

இதனை நேற்று மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி கல்யாணி, ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்கள், தொட்டியில் சேகரிக்கப்பட்ட தூய்மையான மழை நீரை அருந்தினார்கள். ஈரோடு மாநகராட்சி ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில், பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து மீண்டும் கழிவறைகளுக்கு பயன்படுத்தும் திட்ட செயல்பாடுகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

இதுபோல் ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணியை அவர்கள் பார்வையிட்டனர். ஈரோடு வைராபாளையம் காவிரி ஆற்றங்கரையில் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட குப்பை மலைபோல குவிந்து உள்ளது. இதனை மறு சுழற்சி செய்யும் வகையிலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் அன்றாடம் சேகரிக்கும் மக்கும் குப்பையை உரமாக மாற்றவும் இங்கு பிரமாண்ட நுண் உரமாக்கல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தினசரி 10 டன் மக்கும் கழிவுகள் தொட்டிகளில் போடப்படுகின்றன. 45 நாட்களில் இது 2 டன் முதல் 3 டன் அளவுக்கு உரமாக கிடைக்கிறது.

இதுபோல் ஏற்கனவே பல ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டு உள்ள குப்பையை பிரித்து, அவற்றை உபயோகமான மண்ணாக மாற்றும் பணியை சிக்மா குளோபல் என்ற நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக பெரிய தொழிற்சாலை போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பணிகளை மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி கல்யாணி, ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகர பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் குப்பை மேலாண்மை திட்டம் குறித்து எடுத்துக்கூறினார்கள்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி கல்யாணி கூறியதாவது:–

உண்மையிலேயே மக்களுக்கான திட்டமாக 2 பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மழை நீரை அப்படியே பயன்படுத்தும் திட்டம் முன்னோடி திட்டமாக மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குப்பை மேலாண்மை திட்டத்தை பொறுத்தவரை, இங்கு காவிரி ஆற்றங்கரையில் குவிக்கப்பட்டு இருக்கும் குப்பை அகற்றப்படும்போது தண்ணீர் தூய்மை கெடுவது குறையும். அதே நேரம் இந்த குப்பையை உரமாகவும், விவசாய நிலங்களுக்கான மண்ணாகவும் மாற்றுவதால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக அமையும். வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் உரமாக மாற்றப்படுகிறது. இவ்வாறு அனைவரையும் ஒருங்கிணைத்த வளர்ச்சி என்கிற காந்தியடிகளின் கனவு அவரது 150–வது பிறந்தநாளை கொண்டாடும் தருணத்தில் நடந்து வருகிறது.

மழை நீர் சேகரிப்பு திட்டத்துக்கு தேசிய அளவில் பெரிய அளவிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் புதிதாக 245 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. அரசின் பல்வேறு அமைச்சகங்களும் ஒதுக்கீடு செய்யும் நிதியை ஒருங்கிணைத்து ஜல் சக்தி இயக்க மழை நீர் சேகரிப்புக்கான திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி கல்யாணி கூறினார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறும்போது, ‘ஈரோடு மாநகராட்சியில் மழை நீர் குடிநீராக மாற்றப்படும் திட்டம் வெற்றிகரமாக உள்ளது. இங்கு பெரியஅளவிலான தொட்டி அமைத்து தண்ணீரை சேமிக்க ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அலுவலகங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும். இதுபோல் தண்ணீர் மறுசுழற்சி மூலம் கழிவறை பயன்பாட்டுக்கு மாற்றும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்’ என்றார். இந்த ஆய்வின் போது ஈரோடு மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர்கள் சண்முகவடிவு, விஜயா உள்பட மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story