சோரியாங்குப்பம் காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த மணல் பறிமுதல்


சோரியாங்குப்பம் காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த மணல் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Sept 2019 3:15 AM IST (Updated: 25 Sept 2019 10:14 PM IST)
t-max-icont-min-icon

சோரியாங்குப்பம் காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாகூர்,

பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் இரவு நேரத்தில் மாட்டு வண்டிகள், லாரிகளில் மணல் திருட்டு நடக்கிறது. இதனை தடுக்கும் வகையில் பாகூர் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இரவில் ஆற்று பகுதிகளில் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மணல் கொள்ளையர்கள் தென்பெண்ணை ஆற்றில் மாட்டுவண்டிகள் மூலம் மணலை திருடிக்கொண்டு பாகூர், சோரியாங்குப்பம் காட்டுப் பகுதியில் குவியல் குவியலாக பதுக்கி வைத்து லாரிகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் காட்டுப்பகுதியில் மணல் பதுக்கி வைத்திருப்பதாக பாகூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று மணலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story