ரே‌‌ஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும் - கலெக்டர் எச்சரிக்கை


ரே‌‌ஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும் - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Sep 2019 10:30 PM GMT (Updated: 25 Sep 2019 6:26 PM GMT)

ரே‌‌ஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்கள் உள்ளன. மாவட்டம் முழுவதும் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 407 ரே‌‌ஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. வனப்பகுதிகளையொட்டி வாழந்து வரும் ஆதிவாசி மக்களுக்கு நடமாடும் ரே‌‌ஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. 2 லட்சத்து 12 ஆயிரத்து 314 ரே‌‌ஷன் கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே மின்னணு குடும்ப அட்டை(ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் 6 லட்சத்து 50 ஆயிரத்து 794 பேர் அந்தந்த ரே‌‌ஷன் கடைகளில் கோதுமை, அரிசி, துவரம் பருப்பு, உளுந்து, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று பயனடைந்து வருகிறார்கள். மேற்குறிப்பிட்ட 6 லட்சத்து 50 ஆயிரத்து 794 பேர்களில், 6 லட்சத்து 43 ஆயிரத்து 399 பேர்களது ஸ்மார்ட் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 7 ஆயிரத்து 395 பேருக்கு அவர்களின் ஆதார் எண் அந்தந்த ஸ்மார்ட் கார்டுடன் இணைக்கப்பட வேண்டி உள்ளது.

ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்

இதில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் அடங்குவர். மேலும் 2 லட்சத்து 12 ஆயிரத்து 314 ரே‌‌ஷன் கார்டுதாரர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 855 அட்டைகளில் மட்டுமே அலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ள ஆயிரத்து 459 ரே‌‌ஷன் கார்டுகளுக்கு அலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட வேண்டி இருக்கிறது. ரே‌‌ஷன் கார்டுகளில் ஆதார் எண் மற்றும் அலைபேசி எண் பதிவு செய்யும் வகையில் நிலுவையில் உள்ள ரே‌‌ஷன் கார்டுதாரர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட ரே‌‌ஷன் கடைகள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஒட்டப்பட்டு உள்ளது. தற்போது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இ-சேவை மையங்களில் ஆதார் எண் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளதால், ஆதார் எண் மற்றும் அலைபேசி எண் இணைக்காமல் விடுபட்ட ரே‌‌ஷன் கார்டுதாரர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். தவறும்பட்சத்தில் அவர்களுடைய ரே‌‌ஷன் கார்டுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ரே‌‌ஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களை சமூக விரோதிகள் கடத்தி சென்று வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. அதன் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் மற்றும் குற்ற புலனாய்வு துறை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அதில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் 2 ஆயிரத்து 640 கிலோ அரிசி, 42 லிட்டர் பாமாயில், 8 வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து 39 நபர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் வெளிமாவட்டம் அல்லது வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவது தெரியவந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Next Story