கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு; 5 நாளில் தமிழக எல்லையை வந்தடையும்


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு; 5 நாளில் தமிழக எல்லையை வந்தடையும்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:00 AM IST (Updated: 26 Sept 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 5 நாளில் தமிழக எல்லையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ஆண்டு தோறும் ஆந்திர அரசு தமிழ்நாட்டுக்கு 12 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வழங்க வேண்டும். கண்டலேறு அணையில் சேமிக்கப்படும் கிருஷ்ணா தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்காக கிருஷ்ணா கால்வாய் அமைக்கப்பட்டது. கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட் வரை 152 கிலோ மீட்டர் தூரமும், அங்கிருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரமும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் தவணையாக 8 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீரை திறந்துவிடும்படி தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டியை சந்தித்து தண்ணீர் திறக்குமாறு கேட்டுக்கொண்டனர். இருப்பினும் கண்டலேறு அணையில் தண்ணீர் இல்லாததால் உடனடியாக தண்ணீர் திறக்கப்பட வில்லை.

8 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 152 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தமிழக எல்லையான தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட்டை 5 நாட்களில் தண்ணீர் வந்தடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பூண்டி ஏரியை தண்ணீர் சென்றடையும்.

கண்டலேறு அணைக்கு சோமசீலா அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆந்திரா பகுதியிலும் நல்ல

மழை பெய்து வருவதால் கண்டலேறு அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. எனவே இந்த ஆண்டு பூண்டி ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story