கும்மிடிப்பூண்டி அருகே சீரான மின்சாரம் வழங்கக்கோரி கடையடைப்பு போராட்டம்


கும்மிடிப்பூண்டி அருகே சீரான மின்சாரம் வழங்கக்கோரி கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:30 AM IST (Updated: 26 Sept 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே சீரான மின்சாரம் வழங்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடந்தது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள ஆரம்பாக்கம் பகுதியிலும், அதனை சுற்றியுள்ள 4 ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களிலும் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி ஆரம்பாக்கம் பகுதியில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சுற்று வட்டார கிராம பொதுமக்களின் ஆதரவோடு நடைபெற்ற இந்த கடையடைப்பிற்கு பின்னர் 1 மாத காலத்திற்குள் சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மீண்டும் அதே நிலைமை நீடிக்கிறது.

இந்த நிலையில் ஆரம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட கோரி நேற்று ஆரம்பாக்கம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும், கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

இதனையொட்டி நேற்று காலை முதல் ஆரம்பாக்கம் பகுதியில் அனைத்து தரப்பு வியாபாரிகளும் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் எதிர்்பை பதிவு செய்தனர்.

இதனையொட்டி ஆரம்பாக்கம் பஜாரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவர் கோபால் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகேசன், ஜெயராமன், மணிபாலன், ஆறுமுகம், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் துளசிநாராயணன் சிறப்புரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும், வியாபாரிகளும், தனியார் நிறுவன நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Next Story