போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தாதா மணிகண்டனின் உடலை வாங்க மனைவி மறுப்பு
போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி தாதா மணிகண்டனின் உடலை வாங்க அவரது மனைவி மறுத்து விட்டார்.
விழுப்புரம்,
சென்னை அண்ணாநகரில் போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மணிகண்டன் பிரபல தாதா ஆவார். இவரது சொந்த ஊர் புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான குயிலாப்பாளையம் ஆகும். இவர் மீது 8 கொலை வழக்குகள், வழிப்பறி, கொள்ளை என 30 வழக்குகள் உள்ளன.
இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜராகாமல் இருந்து வந்ததால் தாதா மணிகண்டனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், பாலமுருகன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைத்து தாதா மணிகண்டனை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் தான் சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவு பி செக்டார் 4-வது தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்த நிலையில் தாதா மணிகண்டன் போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நேற்று மாலை தாதா மணிகண்டனின் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உடலை அவரது மனைவி ஆனந்தியிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அவர் உடலை பெற மறுத்து விட்டார். அவர் கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சொந்த ஊரான குயிலாப்பாளையத்தில் உள்ள மணிகண்டனின் பெரியப்பா மகளான மஞ்சுளா மற்றும் உறவினர்களிடம் உடலை ஒப்படைப்பது குறித்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனவே மணிகண்டனின் உடல் குயிலாப்பாளையம் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது. இதையொட்டி தாதா மணிகண்டனின் ஆதரவாளர்களால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காக போலீசார் அங்கு ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story