வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழிலாளி கீழே விழுந்து சாவு; உறவினர்கள் முற்றுகை


வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழிலாளி கீழே விழுந்து சாவு; உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 26 Sept 2019 4:30 AM IST (Updated: 26 Sept 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழிலாளி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின்நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பல்வேறு பணிகளில் அமர்த்தியுள்ளது. இங்கு சென்னை எண்ணூரை சேர்ந்த ஜீவானந்தம் (வயது 24) ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த 22-ந் தேதி ஜீவானந்தம் அனல் மின்நிலையத்தில் சுவிட்ச் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த ஜீவானந்தத்தை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஜீவானந்தத்தின் உறவினர்கள் மற்றும் தொழிலாளர்கள் வடசென்னை அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனை அறிந்த மின் நிலைய தலைமை பொறியாளர், ஒப்பந்த நிறுவனத்தினர் மற்றும் மீஞ்சூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜீவானந்தத்தின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உறுதி செய்ததையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story