சென்னை விமான நிலையத்தில் தனியார் மயம் ஆக்குவதை கண்டித்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்


சென்னை விமான நிலையத்தில் தனியார் மயம் ஆக்குவதை கண்டித்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:45 AM IST (Updated: 26 Sept 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள் 3 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

ஆலந்தூர்,

விமான நிலையங்களை தனியார் மயம் ஆக்குவதை கண்டித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் தலைமையில் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கியது.

நாளை (27-ந் தேதி) வரை தொடர்ந்து 3 நாட்கள் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் விமான நிலைய ஊழியர்கள் தினமும் சுழற்சி முறையில் ஈடுபடுகின்றனர்.

இதுபற்றி விமான நிலைய கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ், நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள 126 விமான நிலையங்களில் இந்த 3 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களை தனியாருக்கு விற்கவேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விமான நிலைய கூட்டு குழு இந்த போராட்டத்தை நடத்துகிறது.

123 விமான நிலையங்களை விமான ஆணையகம் நிர்வகித்து வருகிறது. 90-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது. 20 முதல் 25 விமான நிலையங்கள் லாபத்தில் இயங்குகிறது. லாபத்தில் இயங்கும் 15-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை தனியாருக்கு தர இருப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அப்போது இனிமேல் எந்தவொரு விமான நிலையத்தையும் தனியாருக்கு வழங்கப்படமாட்டாது என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை மீறி லாபத்தில் உள்ள விமான நிலையங்களை மட்டும் தனியாருக்கு வழங்குகிறது. ஏன் நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களை தனியாருக்கு வழங்க வேண்டியதுதானே?. எல்லா மக்களும் விமானங்களில் பயணம் செய்யவேண்டும் என்று பிரதமர் கூறுகிறார்.

அப்படியானால் சின்ன விமான நிலையங்களை தனியாருக்கு கொடுத்து அதை மேம்படுத்த வேண்டியதுதானே. ஏன் லாபத்தில் உள்ள விமான நிலையத்தை தனியாருக்கு தருகிறீர்கள்?.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story