ஆன்லைனில் பொருள் வாங்கியதற்கு பரிசு விழுந்ததாக பல கோடி ரூபாய் மோசடி - தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய 5 பேர் கைது
ஆன்லைனில் பொருள் வாங்கியதற்கு பரிசு விழுந்துள்ளதாக கூறி தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருணாசலபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், நான் ஆன்லைனில் ஒரு நிறுவனத்தில் பொருட்கள் வாங்கினேன். சில நாட்கள் கழித்து எனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் எதிர்முனையில் பேசிய நபர், தன்னை அஸ்வின்குமார் என்று அறிமுகம் செய்தார். மேலும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கியதற்காக எனக்கு ரூ.12 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறினார். பரிசு தொகையை தருவதற்கு, எனது வங்கி கணக்கு எண்ணை பெற்று கொண்டார். பின்னர் பரிசு தொகையை தருவதற்காக ஆவண செலவு, சரக்கு-சேவை வரி மற்றும் மாநில அரசு வரி என மொத்தம் ரூ.96 ஆயிரம் செலுத்தும்படி கூறி, ஒரு வங்கி கணக்கு எண்ணையும் கொடுத்தார்.
அதில் நான் பணத்தை செலுத்தினேன். இதையடுத்து பரிசு தொகை ரூ.25 லட்சமாக உயர்ந்துள்ளதாக கூறி, கூடுதலாக பணம் செலுத்தும்படி கூறினார். அவ்வாறு பல முறை ஏமாற்றி என்னிடம் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்தை வாங்கி மோசடி செய்து விட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னிவளவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சத்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ்பிரபு, ரெய்கானா மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
இதில் சென்னை நீலாங்கரையை சேர்ந்த தயாநிதி (வயது 36), பழவந்தாங்கலை சேர்ந்த கார்த்திக் சர்மா (வயது 28), நங்கநல்லூரை சேர்ந்த சரத்பாபு (42), மதுரை தாசில்தார்நகர் மாணகிரியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (40), பெங்களூருவை சேர்ந்த ராபின் (30) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் 5 பேரும் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று, 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நபர்களின் செல்போன் எண், முகவரி ஆகியவற்றை சட்டவிரோதமாக அவர்கள் எடுத்துள்ளனர். பின்னர் ஒவ்வொரு நபரிடமும் தொடர்பு கொண்டு பரிசுத் தொகை விழுந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதற்காக அஸ்வின்குமார் என்ற பெயரை 5 பேரும் பயன்படுத்தி உள்ளனர். பரிசு தொகைக்கான மத்திய-மாநில அரசுகளின் வரி மற்றும் ஆவண செலவு எனக்கூறி ஒரு தொகையை பெற்றுள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ததால் பரிசுத் தொகை உயர்ந்து விட்டதாகவும், அதற்காக கூடுதல் வரி மற்றும் செலவு தொகை தரும்படி கேட்டுள்ளனர்.
இவ்வாறு கூறியே ஒவ்வொரு நபரிடமும் பலமுறை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பலரை ஏமாற்றி, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும், திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story