உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யக்கோரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் முற்றுகை
உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யக்கோரி விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் நேருஜி சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு விழுப்புரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்யப்படும் நெல், உளுந்து, மணிலா, கம்பு, கேழ்வரகு, தினை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இவற்றை விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இவ்வாறு வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விளைபொருட்களுக்குரிய பணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவதால் அந்த பணம் விவசாயிகளுக்கு உடனுக்குடன் கிடைப்பதில்லை என்றும் குறைந்தது 10 நாட்கள் வரை ஆகிறது என்றும் குற்றம்சாட்டி வந்ததோடு, குறைந்த அளவு தொகையை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதுசம்பந்தமாக விவசாயிகள் பல்வேறுகட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
அலைக்கழிப்பு
இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் அருகே கப்பூர், தெளி, கோலியனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி, காணை, சிந்தாமணி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், 500-க்கும் மேற்பட்ட நெல், கம்பு மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் கடந்த வாரம் 100 கிலோ எடை கொண்ட கம்பு மூட்டை ஒன்றுக்கு ரூ.2,600-க்கு விற்பனையான நிலையில் தற்போது வெறும் ரூ.1,500 வரை குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் ஒரு மூட்டை கம்புக்கு கூட அதன் பணத்தை வங்கியில் போடுவதாக கூறி விவசாயிகளை வியாபாரிகள் அலைக்கழிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மறியல் செய்ய முயற்சி
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9.45 மணியளவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதையறிந்த விழுப்புரம் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தி, எந்த காரணத்தை கொண்டும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறை ஏற்படுத்தக்கூடாது என்றும் அறிவுரை வழங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்குள் அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளைபொருட்களை கொள்முதல் செய்த பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவதால் காலதாமதம் ஏற்படுவதாகவும், எனவே கொள்முதல் செய்த அன்றைய தினமே பணத்தை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதையறிந்ததும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் ஆறுமுகசாமி விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதனை ஏற்ற விவசாயிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story