திருப்பூர் மாவட்ட பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு - கலெக்டராக பொறுப்பேற்ற பின்பு கே.விஜயகார்த்திகேயன் பேட்டி


திருப்பூர் மாவட்ட பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு - கலெக்டராக பொறுப்பேற்ற பின்பு கே.விஜயகார்த்திகேயன் பேட்டி
x
தினத்தந்தி 25 Sep 2019 10:45 PM GMT (Updated: 25 Sep 2019 8:13 PM GMT)

திருப்பூர் மாவட்ட கலெக்டராக கே.விஜய கார்த்திகேயன் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த கே.எஸ்.பழனிசாமி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நகர்ப்புற கல்வி இயக்கக இயக்குனராக இருந்த கே.விஜயகார்த்தி கேயன் திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 7.15 மணி அளவில் திருப்பூர் மாவட்ட கலெக்டராக கே.விஜயகார்த்திகேயன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பின்பு கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப்படும். தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கட்டமைப்பு வசதி மேம்பாடு, சேவைகள், குறைதீர்ப்புக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எந்த நேரத்திலும் மக்கள் பணி செய்ய தயாராக உள்ளேன். பொதுப்பிரச்சினைகள் தொடர்பாக எந்த நேரத்திலும் பொதுமக்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அவற்றை தீர்க்க வழிவகை செய்யப்படும்.

குறிப்பாக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் நடைபெறும் பணிகள், குறைதீர்ப்பு முகாம்கள், குடிமராமத்து பணிகளுக்கு தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள கடைகளுக்கு சென்று பார்த்தபோது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்துள்ளது. காகித பைக்கு மாறியுள்ளனர். அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். அனைவரும் இணைந்து செயல்படும்போது திருப்பூர் மாவட்டத்தை முன்னிலை இடத்துக்கு கொண்டு சேர்க்க முடியும். அந்த எதிர்பார்ப்போடு நான் பணியை தொடங்கியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன்(வயது 33) கடந்த 2012-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று உதவி கலெக்டராக ஈரோடு மாவட்டத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சப்-கலெக்டராக பணியாற்றினார்.

அதன்பிறகு கோவை மாநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்தார். பின்னர் கோவை மாநகர ஸ்மார்ட் சிட்டி நிறுவன நிர்வாக இயக்குனராகவும், நகர்புற கல்வி இயக்கக இயக்குனராகவும் இருந்து திருப்பூர் மாவட்ட கலெக்டராகியுள்ளார். இவருடைய சொந்த ஊர் மதுரையாகும்.

Next Story