மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை இறந்ததா? மாயமான தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு
ஆரணி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்ற பெண் கணவருடன் திடீரென மாயமானார். குழந்தை விற்கப்பட்டதாக ஒரு தரப்பினரும், இறந்ததால் புதைத்து விட்டு தம்பதியினர் தப்பியதாக வேறு சிலரும் கூறவே அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தம்பதியை தேடி வருகின்றனர்.
ஆரணி,
ஆரணியை அடுத்த சேவூர் காலனி பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற கன்றாயன். இவரது மனைவி சோலையம்மாள். இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் இருந்த நிலையில் சோலையம்மாள் 5-வது முறையாக கர்ப்பிணியானார். அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த 14-ந் தேதி பிரசவ வலி ஏற்படவே அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர்.
அங்கு மறுநாள் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திடீரென சோலையம்மாள், பிறந்த குழந்தையுடன் மாயமாகி விட்டார். அவருக்கு மருத்துவமனையில் உதவியாக இருந்தவர்களும் மாயமாகி விட்டனர். இது குறித்து டாக்டர்கள் குழுவினர், அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா, சுகாதார ஆய்வாளர் ராஜா, பகுதி செவிலியர் மாலினி ஆகியோர் சேவூர் காலனி பகுதிக்கு சென்று அங்குள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது பிறந்த பெண் குழந்தையை சோலையம்மாள் விற்று விட்டதாக ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தை இறந்து விட்டதாகவும் அதனால் புதைத்து விட்டு அனைவரும் சென்று விட்டதாக வேறு சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆரணி நகர போலீஸ் நிலையத்தில் அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு வழக்குப்பதிவு செய்து குழந்தை இறந்ததா? அல்லது விற்கப்பட்டதா? என விசாரணை நடத்தி குமார் என்ற கன்றாயன், அவரது மனைவி சோலையம்மாளை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story