கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய தனியார் ரசாயன தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைப்பு


கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய தனியார் ரசாயன தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 26 Sept 2019 4:00 AM IST (Updated: 26 Sept 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

கழிவுநீரை சுத்திகரிக்காமல் ரகசியமாக வெளியேற்றி வந்த தனியார் ரசாயன தொழிற்சாலைக்கு உதவி கலெக்டர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கி வரும் தனியார் ரசாயன தொழிற்சாலை நிர்வாகம் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுவதாகவும் அதனால் சிப்காட், நவ்லாக் உள்பட பல பகுதிகளில் நீர் நிலைகள் மாசடைந்து வருவதாகவும் நவ்லாக் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத்திடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சந்திரசேகர் உள்பட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ரசாயன தொழிற்சாலையை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ரகசியமாக அமைக்கப்பட்ட வடிகால் வழியாக மழைநீர் வடிகாலில் வெளியேற்றப்பட்டு வருவது தெரிய வந்தது.

இவ்வாறு கலக்கப்படும் தொழிற்சாலை கழிவுநீர், புளியங்கண்ணு ஏரியில் தேங்கி ராணிப்பேட்டை, காரை வழியாக பாலாற்றில் கலப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

மேலும் இந்த நிறுவனத்திற்கு சிப்காட் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் நீர் இணைப்பை துண்டிக்குமாறும், அதன் நீர் வழங்கல் அமைப்பை ‘சீல்’ வைக்கவும், தொழிற்சாலை உற்பத்தியை நிறுத்தவும் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார். மேலும் இது குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் ராணிப்பேட்டை போலீசாருக்கு தெரிவித்தார்.

இதையடுத்து வாலாஜா தாசில்தார் பாலாஜி தொழிற்சாலை செயல்படுவதை தடுக்க நீர் இணைப்பை துண்டித்தும், நீர் வழங்கல் அமைப்புக்கும் ‘சீல்’ வைத்தும் நடவடிக்கை எடுத்தார்.

இதனிடையே தொழிற்சாலைக்குள் உதவி கலெக்டர் ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது நவ்லாக் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொழிற்சாலை முன்பு திரண்டு கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் தொழிற்சாலையை மூடக்கோரி கோஷமிட்டனர். அப்போது தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story