அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி போலி பணியாணை கொடுத்து ரூ.13 லட்சம் மோசடி - தனியார் பள்ளி பெண் தாளாளர் மீது புகார்


அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி போலி பணியாணை கொடுத்து ரூ.13 லட்சம் மோசடி - தனியார் பள்ளி பெண் தாளாளர் மீது புகார்
x
தினத்தந்தி 25 Sep 2019 10:45 PM GMT (Updated: 25 Sep 2019 8:13 PM GMT)

அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி 3 பேருக்கு போலி பணியாணை கொடுத்து ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக தனியார் பள்ளி பெண் தாளாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வேலூர், 

நெமிலி தாலுகாவில் உள்ள எலத்தூர் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு விவசாயம் செய்வதுடன், மாடுகளும் வளர்த்து வந்தேன். எங்கள் பகுதியில் பள்ளி நடத்திவரும் பெண் தாளாளரும், அரசு பள்ளி ஆசிரியரான அவருடைய தந்தையும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது பள்ளி தாளாளரின் தந்தை, நான் பலருக்கு அரசு வேலை வாங்கிக்கொடுத்துள்ளேன். உங்களுக்கும், உங்களுக்கு வேண்டியவர்களுக்கும் கிராமநிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் வேலை வாங்கித்தருகிறேன் என்று நம்பவைத்தார்.

அதை நம்பி நானும், குடும்பத்தினரும் மாடுகளை விற்றும், கடன்வாங்கியும், நகைகளை அடகுவைத்தும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தவணையாக ரூ.7 லட்சம் கொடுத்தோம். அதன்பிறகு சில நாட்கள் கழித்து ரூ.5 லட்சமும், கடந்த பிப்ரவரி மாதம் ரூ.1 லட்சமும் கொடுத்தோம்.

மொத்தம் ரூ.13 லட்சத்தை பெற்றுக்கொண்ட இருவரும் சில மாதம் கழித்து இளநிலை உதவியாளர் பணியாணையை எனக்கும், எனது உறவினருக்கும், கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கான பணியாணையை எனது மனைவிக்கும் கொடுத்தனர். மறுஉத்தரவு வரும்வரை இதையாரிடமும் காட்டவேண்டாம் என்று கூறினர்.

அதன்பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு மேலும் 3 நபர்களுக்கு அரசு பணிநியமன உத்தரவு வாங்கித்தருவதாகக்கூறினர்.

இந்த நிலையில் எங்களிடம் பணம் பெற்ற அரசுபள்ளி ஆசிரியர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டது தெரியவந்தது. அவர்கள் குறித்து விசாரித்தபோது பலரிடம் இதுபோன்று பணம்பெற்றுக்கொண்டு மோசடி செய்திருப்பதும், எங்களுக்கு கொடுத்தது போலி பணியாணை என்பதும் தெரிந்தது.

உடனே பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டதற்கு பள்ளி பெண் தாளாளர், என்மீது போலீசில் பொய்யான புகார் கொடுத்தார். உடனே நான், எங்களுக்கு கொடுத்த போலி பணியாணையை போலீசில் காண்பித்தேன். இதனால் ஆத்திரம் அடைந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக என்மீது வழக்குதொடுப்பதாக அவர் மிரட்டினார்.

எனவே போலி பணியாணை கொடுத்து ரூ.13 லட்சம் மோசடி செய்த பள்ளி பெண் தாளாளர் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story