பரமத்தி வேலூரில், நகைக்கடையில் கொலுசு திருடிய பெண் கைது - மேலும் 2 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு
பரமத்திவேலூரில் நகைக்கடையில் கொலுசுகளை திருடிச்சென்ற பெண் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கடைவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் சுப்பிரமணியம் (வயது 70). இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு 3 பெண்கள் வந்துள்ளனர். இதில் 2 பெண்கள் வெள்ளிக்கொலுசுகளை வாங்குவது போல் கடையில் இருந்த கொலுசுகளை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு பெண் தனது காலில் உள்ள மெட்டியை சரி செய்துவிடுமாறு கடை உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து கடையின் உரிமையாளர் கீழே குனிந்து அந்த பெண்ணின் மெட்டியை சரி செய்துள்ளார். அப்போது 2 பெண்களும் கொலுசுகள் வைக்கப்பட்டிருந்த பையிலிருந்து வெள்ளிக்கொலுசுகளை எடுத்துக்கொண்டு திடீரென கடையில் இருந்து வெளியே ஓடியுள்ளனர். உடனே மெட்டியை சரி செய்யவேண்டும் என கூறிய பெண்ணும் கடையிலிருந்து வெளியே ஓடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர் அவர்களை துரத்தி சென்றார். ஆனால் பிடிக்க முடியவில்லை. பின்னர் பரமத்தி வேலூர் பஸ் நிலையம் சென்று தேடியபோது சேலம் செல்லும் பஸ்சில் 3 பெண்களும் இருந்துள்ளனர். நகைக்கடைக்காரரை பார்த்தவுடன் அவர்கள் சுதாரித்துக்கொண்டு மீண்டும் ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.
அப்போது பொதுமக்கள் சுற்றி வளைத்து ஒரு பெண்ணை மட்டும் பிடித்து பரமத்திவேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அப்பெண் கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த சுரேஷ்பாண்டி மனைவி விஜயகுமாரி (32) என்பது தெரியவந்தது. அதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த இரண்டு பெண்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story