பொதுமக்கள் எந்த நேரமும் குறைகளை தெரிவிக்கலாம் - புதிய கலெக்டர் மெகராஜ் பேட்டி
நாமக்கல் மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட மெகராஜ், பொதுமக்கள் எந்த நேரமும் தன்னை அணுகி குறைகளை தெரிவிக்கலாம், என்றார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஆசியா மரியம் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நாமக்கல் மாவட்ட புதிய கலெக்டராக வேலூரில் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த கா.மெகராஜ் நியமிக்கப்பட்டார்.
இவர் நேற்று நாமக்கல் வந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய கலெக்டர் மெகராஜின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள விஜயாபதி கிராமம் ஆகும். இவர் ஊரக வளர்ச்சித்துறையில் 10 ஆண்டுகள் திட்ட இயக்குனராகவும், 8 ஆண்டுகள் கூடுதல் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனராக பணிபுரிந்து உள்ளார்.
புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட மெகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்ட மக்கள் கடின உழைப்பாளிகள். அரசு ஊழியர்கள், அவர்களிடம் உழைப்பை கற்றுக்கொண்டு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். பொதுமக்கள் எந்த நேரமும் என்னை அணுகி தங்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story