தடகள போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் அபாரம் - ஈட்டி எறிதலில் வேலூர் ஹேமமாலினி சாம்பியன்


தடகள போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் அபாரம் - ஈட்டி எறிதலில் வேலூர் ஹேமமாலினி சாம்பியன்
x
தினத்தந்தி 25 Sep 2019 10:00 PM GMT (Updated: 25 Sep 2019 8:15 PM GMT)

திருவண்ணாமலையில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தினர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான ஜூனியர் தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் தமிழகம், கர்நாடகா, பீகார், அரியானா, மத்திய பிரதேசம் உள்பட நாடு முழுவதிலும் இருந்து 25 மாநிலங்களை சேர்ந்த 950 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே வீரர், வீராங்கனைகள் பலர் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். குறிப்பாக தமிழக வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றனர்.

பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஷெரின் ஆன்ட்ரியா முதலிடத்தையும், தபிதா 3-வது இடத்தையும், ஈட்டி எறிதலில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமமாலினி முதலிடத்தையும், வட்டு எறிதலில் காருண்யா முதலிடத்தையும் பிடித்தனர். ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அருண்குமார் முதல் இடத்தையும், விபின்ராஜ் 2-ம் இடத்தையும், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சதீஷ் 2-ம் இடத்தையும் பிடித்து முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.

2-ம் நாளான நேற்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், கம்பு ஊன்றி தாண்டுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. காலை முதல் வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். குறிப்பாக கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தியதை பார்வையாளர்கள் பாராட்டினார்.

போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுனர்கள், பயிற்றுனர்களுக்கு தங்கும் இடம், உணவு வசதி போன்றவை திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க தலைவர் எ.வ.வே.கம்பன் சார்பில் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ஆயிரம் ரூபாய், ரூ.750, ரூ.500-ம் அருணை பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவர் எ.வ.குமரன் சார்பில் வழங்கப்படுகிறது. போட்டியின் நிறைவாக இன்று (வியாழக்கிழமை) பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகள் வழங்கப்படுகிறது.

Next Story