தாலுகா அளவில் நடைபெறும் “குறைதீர்வு கூட்டத்துக்கு மின்வாரிய அதிகாரிகள் வருவதில்லை” - விவசாயிகள் புகார்
“தாலுகா அளவில் நடைபெறும் குறைதீர்வு கூட்டத்துக்கு மின்வாரிய அதிகாரிகள் யாரும் வருவதில்லை” என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறினர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு விழுப்புரம் மண்டல தலைமை பொறியாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள், மின்நுகர்வோர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது குறைகளை, கோரிக்கைகளை எடுத்துக்கூறினர்.
விவசாயிகள் கூறுகையில், “விவசாய நிலங்களில் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றவேண்டும். தாழ்வாக செல்லும் மின்வயர்களை மேலே உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்மின்கோபுரங்கள் அமைக்கப்படும் விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயர்மின்கோபுரம் அமைக்கும் இடம் குறித்து முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும். தாலுகா அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்துக்கு மின்வாரிய அதிகாரிகள் யாரும் வருவதில்லை. விவசாய பம்ப் செட்டுகளில் மின் அளவீடு கருவி பொருத்தப்படுகிறது. பொருத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
அப்போது பேசிய தலைமை பொறியாளர் சிவராஜ், “ஏற்கனவே பொருத்தப்பட்ட மின் அளவீடு கருவி பழுது ஏற்பட்டால் அவற்றை புதிதாக மாற்றுவார்கள். புதிதாக மின் இணைப்பு பெறுபவர்களுக்கு தான் மின்அளவீடு கருவி பொருத்தப்படுகிறது. எதற்கு என்றால் எவ்வளவு மின்சாரம் வழங்கப்படுகிறது என்பதை கணக்கெடுத்து அதை நாங்கள்அரசுக்கு தெரிவித்து மானியம் பெறுவோம்” என்றார்.
Related Tags :
Next Story