ஆற்காடு அருகே, பார்சல் நிறுவன லாரியில் கதவை உடைத்து திருடிய கும்பல் - துரத்திச்சென்ற டிரைவரை தாக்கிவிட்டு தப்பியது


ஆற்காடு அருகே, பார்சல் நிறுவன லாரியில் கதவை உடைத்து திருடிய கும்பல் - துரத்திச்சென்ற டிரைவரை தாக்கிவிட்டு தப்பியது
x
தினத்தந்தி 26 Sept 2019 4:00 AM IST (Updated: 26 Sept 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே பார்சல் நிறுவன லாரியில் கதவை உடைத்து பொருட்களை திருடிய கும்பலை டிரைவர் துரத்திச்சென்றார். ஆனால் அந்த கும்பல் டிரைவரை தாக்கிவிட்டு லாரியில் தப்பிவிட்டது.

ஆற்காடு, 

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (வயது 38) இவர் சென்னையில் உள்ள தனியார் பார்சல் நிறுவன லாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து பார்சல்களை ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கி புறப்பட்டார்.

ஆற்காட்டை கடந்து ரத்தினகிரி பகுதியில் பூஞ்சோலை நகர் அருகே வந்தபோது தனது லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு சிறிது நேரம் தூங்கிக்கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட ஒரு கும்பல், பார்சல் நிறுவன லாரியின் பின்பக்க கதவை உடைத்து அதிலிருந்த துணி மூட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள் ஆகியவற்றை மற்றொரு லாரியில் ஏற்றினர்.

அப்போது சத்தம் கேட்டு விழித்தெழுந்த டிரைவர் ஜம்புலிங்கம், பின்னால் சென்று பார்த்தார். உடனே அந்த மர்ம கும்பல் தங்கள் லாரியில் ஏற்றிய பொருட்களுடன் தப்பினர். சென்னை நோக்கி சென்ற அந்த லாரியை மடக்குவதற்காக ஜம்புலிங்கம் தனது லாரியில் துரத்திச்சென்றார்.

விஷாரத்தை அடுத்த வேப்பூர் பகுதியில் மர்ம கும்பல் தங்களது லாரியை நிறுத்தியது. இதைத் தொடர்ந்து டிரைவர் ஜம்புலிங்கம் அந்த கும்பலிடம் சென்று தனது பார்சல் லாரியில் திருடியதை கண்டித்து பொருட்களை திரும்ப தரும்படி கூறினார். ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஜம்புலிங்கத்தை சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர். படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ரத்தினகிரி போலீஸ் நிலையத்தில் டிரைவர் ஜம்புலிங்கம் புகார் அளித்தார். மர்ம கும்பல் திருடிய பொருட்களின் மதிப்பு ரூ. 1 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிய கும்பலையும் அவர்கள் சென்ற லாரியையும் தேடி வருகின்றனர்.

Next Story