ஆலங்குடி பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும்போது தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு


ஆலங்குடி பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும்போது தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Sept 2019 4:30 AM IST (Updated: 26 Sept 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும் போது தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி பகுதி சாலைகளில் கடைகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் பேரூராட்சி செயல் அலுவலருக்கு மனுக்கள் கொடுத்தனர். அதனடிப்படையில் செயல் அலுவலர் கணேசன் 3 மாதங்களுக்கு முன்பு சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளுமாறு அறிவித்தார். ஆக்கிரமிப்பாளர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், ஆலங்குடி போலீசார் உதவியுடன் அதிகாரிகள் நேற்று ஜாகீர் உசேன் தெரு மற்றும் பள்ளிவாசல் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தற்கொலை மிரட்டல்

அப்போது கடை உரிமையாளர்கள் ஒன்று கூடி மறியலில் ஈடுபட போவதாக கூறி அங்குள்ள சாலையில் திரண்டனர். இந்நிலையில் ஒரு கடை உரிமையாளர் ஆக்கிரமிப்பை அகற்றினால் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி சாலைக்கு வந்தார். அவரை அங்கிருந்த போலீசார் தடுத்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களையும் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாசில்தார் அலுவலகத்தில் வர்த்தக சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வருகிற நவம்பர் 5-ந்தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை தாங்களே முன் வந்து அகற்றி கொள்வது என்று வர்த்தக சங்கத்தினர் கூறினர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வர்த்தக சங்கத்தினர் மற்றும் கடைக்காரர்களிடம் எழுத்து மூலம் உத்தரவு வாங்கியதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் தாசில்தார் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், தலைமை நில அளவையர் மாரிமுத்து, வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story