‘மக்கள் முன்னேற்ற காங்கிரஸ்’ கண்ணன் புதிய கட்சி தொடங்கினார்; காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு


‘மக்கள் முன்னேற்ற காங்கிரஸ்’ கண்ணன் புதிய கட்சி தொடங்கினார்; காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு
x
தினத்தந்தி 26 Sept 2019 5:00 AM IST (Updated: 26 Sept 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற பெயரில் முன்னாள் எம்.பி. ப.கண்ணன் புதிய கட்சியை தொடங்கினார். காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை அரசியலில் மிக முக்கிய சக்தியாக திகழ்ந்தவர் ப.கண்ணன். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர் சபாநாயகர், அமைச்சர், ராஜ்யசபா எம்.பி. போன்ற பதவிகளை வகித்தவர்.

கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து கண்ணன் விலகினார். புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் 2 முறை தனிக்கட்சி தொடங்கினார். சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து தாய் கட்சியான காங்கிரசுடன் தனது கட்சியை இணைத்தார்.

காங்கிரசில் இருந்து விலகி மூப்பனார் தொடங்கிய த.மா.கா.வுக்கு புதுவை மாநில தலைவராக ப.கண்ணன் செயல்பட்டார். ராஜ்யசபா எம்.பி. பதவிக்காலம் முடிந்தபின் அவர் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வில் இணைந்து ராஜ்பவன் தொகுதியில் ப.கண்ணன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார். தொடர்ந்து மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு அமைதியாக இருந்தார். சமீபத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து விளம்பரங்களை வெளியிட்டார்.

எனவே அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதுவை கம்பன் கலையரங்கில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.

அப்போது அவர்கள் மத்தியில் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். அந்த கட்சிக்கான பெயர் பலகையை மூத்த ஆதரவாளரான பாண்டியன் என்பவரை விட்டு திறக்க வைத்தார்.

ஆதரவாளர்கள் மத்தியில் கண்ணன் பேசியதாவது:-

நான் வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள். அதிகார பலம் என்னிடம் இல்லை. நீங்கள் மட்டும்தான் எனக்கு பலம். நமது மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும். நான் பலரால் பலமுறை ஏமாற்றப்பட்டுள்ளேன். அந்த அனுபவம் எனக்கு உள்ளது. எனவே இனி நான் யாரிடமும் ஏமாறமாட்டேன்.

பதவி ஆசை என்பது எனக்கு இல்லை. அது எனக்கு தோளில் கிடக்கும் துண்டு போன்றது. நான் பார்க்காத பதவி இல்லை. புதுவை அரசில் நான் ஒரேயொரு பதவியைத்தான் (முதல்-அமைச்சர்) அனுபவிக்கவில்லை.

இந்த அரசால் இலவச அரிசியை வழங்க முடியவில்லை. இந்த ஆட்சியும், கடந்த கால ஆட்சியும் மக்களுக்காக எதை செய்தது. அரும்பார்த்தபுரம் பாலத்தை கட்டி முடிக்கவே 100 ஆண்டுகள் ஆகும் போல் இருக்கிறது. விரைவில் வெள்ளிவிழாவும் வந்துவிடும். புதுவையில் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாங்கித்தந்த பெருமை எனக்கு உண்டு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம்.

எதிர்க்கட்சி என்று ஒன்று உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் (ரங்கசாமி) என்றால் மந்திரம் ஓதுகிறார். அழுக்குசாமியிடம் சென்றுள்ளார் என்கின்றனர். இதுவா அரசியல்? இதுபோன்ற தரித்திரங்களை போக்கிட நான்வந்துள்ளேன்.

இவ்வாறு கண்ணன் பேசினார்.

மேலும் அவர் பேட்டியின்போது கூறுகையில், ‘காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். அது கூட்டணியா? தனித்தா? என்பதை பின்னர் பார்க்கலாம். மக்கள் மனநிலையை இந்த தேர்தலின்போது அறிவோம். கூட்டணி தொடர்பாக பூர்வாங்க பேச்சுவார்த்தை எதையும் தொடங்கவில்லை. இந்த ஆட்சி திருந்தும் வரை போராடுவோம். அவர்கள் திருந்தாவிட்டால் மக்கள் ஓட்டு என்ற ஆயுதத்தால் விரட்டி அடிப்பார்கள். நான் இரு கட்சி ஆரம்பித்துள்ளேன். அப்போதெல்லாம் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் என்வீட்டு கதவினை தட்டி கேட்டதால் மீண்டும் காங்கிரசுடன் இணைந்தேன்’ என்றார்.

Next Story