அமலாக்கத்துறை முன் நாளை ஆஜர் ‘மத்திய அரசுக்கு அடிபணிய மாட்டேன்’ - சரத்பவார் பேட்டி

கூட்டுறவு வங்கி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை முன் நாளை ஆஜராவதாக கூறிய சரத்பவார், மத்திய அரசுக்கு அடிபணிய மாட்டேன் என்று பரபரப்பாக பேட்டி அளித்தார்.
மும்பை,
மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த முறைகேடுகள் காரணமாக அரசு கருவூலத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
விதிமுறையை மீறி சர்க்கரை ஆலை மற்றும் நூற்பு ஆலைகளுக்கு கடன் வழங்கியது உள்ளிட்ட காரணங்களால் இந்த இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக மும்பை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த மாதம் மும்பை போலீசார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அஜித் பவார் மற்றும் 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இதில் அரசியல் தலைவர்கள், கூட்டுறவு வங்கி முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் அடங்குவர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, போலீசார் பதிவு செய்து இருந்த வழக்கை அடிப்படையாக வைத்து அஜித்பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சரத்பவார் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியாகவும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் மந்திரியாகவும் பதவி வகித்தவர்.
மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் நேற்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கி உறுப்பினராகவோ அல்லது முடிவேடுக்கும் இடத்திலோ இல்லாதபோதும் என்னை இந்த வழக்கில் சேர்த்த அமலாக்கத்துறைக்கு நன்றி. இந்த நடவடிக்கையில் நான் ஆச்சரியப்பட வேண்டியது எதுவும் இல்லை.
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக நான் பெரும்பாலும் மும்பைக்கு வெளியே தான் இருப்பேன். எனவே நான் தலைமறைவாக இருப்பதாக அமலாக்கத்துறை என்னை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. நான் வெள்ளிக்கிழமை (நாளை) அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செல்ல இருக்கிறேன். மேலும் அவர்கள் விரும்பும் தகவல்களை அவர்களுக்கு அளிப்பேன். வழக்கு குறித்து விசாரிப்பது அவர்களின் உரிமை. அரசியல் சாசனத்தை நம்புபவன் நான். எனவே நான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.
சத்ரபதி சிவாஜி மகாராஜின் சித்தாந்தத்தை மராட்டியம் பின்பற்றுகிறது. டெல்லி அரியணைக்கு முன் தலைகுனிந்து செல்வது எங்களுக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மறுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
‘‘இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய, போலீசாரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடைபெறும் போது அந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கும். அந்த வகையில் இந்த வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்து உள்ளது. அரசியல் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறுவது தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story