நவராத்திரி கொலுவில் புதுவரவான அத்திவரதர் பொம்மைகள்
‘நவம்’ என்றால் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் பராசக்தியின் ஒன்பது விதமான அம்சங்கள் கொண்ட ஒன்பது தேவியரை வழிபடும் பண்டிகைதான் நவராத்திரி.
கடலூர்,
இந்த நவராத்திரி விழாவானது, புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் விரதங்கள், இரவு நேர பூஜை வழிபாடுகளோடு நடைபெறும். பத்தாம் திதியான அம்பிகை, அசுரனை வெற்றிகொண்ட தசமி திதியுடன் இந்த விழா நிறைவு பெறும். நவராத்திரி என்றாலே பலவிதமான பொம்மைகளை தங்கள் கற்பனைக்கேற்ப வடிவமைத்து வைத்து வழிபடுவது தான் சிறப்பு ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு பொம்மைகள் வரவில் புதுவரவாக அத்திவரதர் வந்துள்ளார். இது நிச்சயம் அனைவரையும் கவரும் என்கிறார்கள் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் வண்டிப்பாளையம், மணவெளி, சாவடி உள்பட பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 3 தலைமுறைகளுக்கு மேலாக பல்வேறு விதமான நவராத்திரி கொலு பொம்மைகள், விநாயகர் சிலைகள், கிருஷ்ணர் பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் கிடைக்கும் களிமண் மற்றும் சிமெண்டு, காகித கூழ் போன்றவற்றை பயன்படுத்தி கொலு பொம்மைகளை பல வண்ணங்களில் தயார் செய்கிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நவராத்திரி விழா வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த விழாவின் போது வீடு மற்றும் கோவில்களில் சாமி, அம்மன், தேசத்தலைவர்கள், புராண காட்சிகளை விளக்கும் வகையில் பொம்மைகள் வைத்து வழிபடுவார்கள். இதற்கான பொம்மைகள் தயாரிப்பில் இப்பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டனர்.
தற்போது இந்த நவராத்திரி விழாவில் அத்திவரதர் பொம்மைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் பக்தர்களுக்கு சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் காட்சி அளித்தார். இதை லட்சக்கணக்கான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர்.
இதன் எதிரொலியாக இந்த ஆண்டு பண்டிகையில் கொலு பொம்மைகளில் புதுவரவாக வந்துள்ள அத்திவரதர் முதன்மை பெற்று திகழ்கிறார். இதற்காக கடலூர் பகுதியில் பொம்மைகள் தயாரிப்போரிடம் இருந்து அத்திவரதர் பொம்மைகளை தயாரித்த தர வியாபாரிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இதன்படி பொம்மை தயாரிப்போரும் அத்திவரதர் பொம்மைகளை தயாரிக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 இன்ச் அளவு கொண்ட பொம்மை முதல் 2 அடி உயரம் வரை உள்ள அத்திவரதர் பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை ரூ.500 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் அதிக அளவில் அத்திவரதர் பொம்மைகளை வாங்குவதால் இதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் பொம்மை செய்பவர்கள் தேவைக்கேற்க அத்திவரதர் பொம்மைகளை தயார் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
இது பற்றி பொம்மை தயார் செய்யும் தொழிலில் ஈடுப்பட்டுள்ளகார்த்திகேயன் கூறுகையில், நவராத்திரி கொலு பொம்மைகளை ஆண்டுதோறும் செய்து வருகிறோம். இந்த ஆண்டு அத்திவரதர் பொம்மைகளை தயார் செய்ய முடிவு செய்தோம். ஆனால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. இருப்பினும் அத்திவரதர் பொம்மைகளை செய்தோம். இதற்கு அனைத்து ஊர்களில் இருந்தும் பொதுமக்கள், வியாபாரிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் அவர்களின் தேவைக்கேற்ப எங்களால் அத்திவரதர் பொம்மைகளை தயார் செய்து வழங்க முடியவில்லை. நவராத்திரி கொலு வைக்காத வீடுகளிலும் இந்த அத்திவரதர் பொம்மைகள் அனைவரையும் கவர்ந்துள்ளதால், பலர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.
Related Tags :
Next Story