‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: என்.எல்.சி. சுரங்க நீர் விளைநிலத்துக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: என்.எல்.சி. சுரங்க நீர் விளைநிலத்துக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Sept 2019 4:15 AM IST (Updated: 26 Sept 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

கம்மாபுரம் அருகே விவசாய நிலத்துக்குள் என்.எல்.சி. சுரங்க நீர் புகாமல் தடுக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம், கொம்பாடிக்குப்பம், ஊ.மங்கலம், கொளப்பாக்கம், சு.கீணணூர் பகுதியையொட்டி என்.எல்.சி. 2-வது நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இங்கு சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் இந்த பகுதியில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கம்மாபுரம் பகுதியில் பெய்த கனமழையால், சுரங்கத்தில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீருடன் மணலும் அடித்து வரப்பட்டு அருகில் இருந்த விவசாய நிலத்திற்குள் புகுந்தது. இதனால் அங்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்த சம்பா நெற்பயிர்களை மண் பரப்பு மூடியதுடன் தண்ணீரும் அதிகளவில் தேங்கி நிற்கிறது. எனவே இதை வடிய வைத்தாலும், நெற்பயிர்களை காப்பாற்ற முடியாது என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ‘தினத்தந்தி’யில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுரங்கத்தில் இருந்து வாய்க்காலில் வரும் தண்ணீர் விவசாய நிலத்திற்குள் புகாமல் இருக்கும் வகையில் தடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் நிலத்தில் படிந்துள்ள மணலை அகற்றியதுடன், தண்ணீரை வடிய வைக்கும் பணியும் நடந்தது.

நடவு செய்த சில நாட்களிலேயே நெற்பயிர் சேதமாகி போனாலும், என்.எல்.சி. நிர்வாகம் தேங்கிய நீரை வடிய வைப்பதுடன், அங்கு படிந்துள்ள மண்ணையும் அகற்ற நடவடிக்கை எடுத்து வருவது விவசாயிகள் மனதில் சற்று ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story