குற்றாலத்தில் இதமான சூழல்: அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்


குற்றாலத்தில் இதமான சூழல்: அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
x
தினத்தந்தி 25 Sep 2019 10:30 PM GMT (Updated: 25 Sep 2019 11:19 PM GMT)

குற்றாலத்தில் இதமான சூழல் நிலவுகிறது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.

தென்காசி, 

தமிழகத்தில் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று குற்றாலம். இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். இடையிடையே இதமான வெயில் அடிக்கும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள். இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்வார்கள்.

இந்த ஆண்டு சீசன் தாமதமாக தொடங்கியது. தொடங்கிய சில நாட்களிலேயே சாரல் மழை இல்லாமல் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். வழக்கமாக ஆகஸ்டு மாதம் 15-ந் தேதியுடன் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விடும். இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக செப்டம்பர் மாதம் வரையிலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது.

நேற்று காலையில் குற்றாலத்தில் வெயில் அடித்தது. பின்னர் வெயில் குறைந்து லேசான சாரல் மழை தூறியது. குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவியது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது.

கூட்டம் சற்று குறைவாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் ஆனந்தமாக குளித்து சென்றனர். மேலும் ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள படகு குழாமில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்தனர்.

Next Story