குற்ற கண்டுபிடிப்பு திறனுக்கு ஏற்ப போலீஸ் நிலையங்களுக்கு விருது - மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தகவல்


குற்ற கண்டுபிடிப்பு திறனுக்கு ஏற்ப போலீஸ் நிலையங்களுக்கு விருது - மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தகவல்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:00 AM IST (Updated: 26 Sept 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

குற்ற கண்டுபிடிப்பு திறனுக்கு ஏற்ப சிறந்த போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் என்று ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்துள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா கூறியதாவது:-

கோவை,

மேற்கு மண்டல பகுதியில் உள்ள 8 மாவட்டங்களில் குற்றத்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விபத்துகளை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

குற்றங்களை கண்டுபிடித்தல், தடுத்தல், போலீஸ் நிலையங்களில் தேவையான அடிப்படை வசதிகளுடன் சிறப்பாக வைத்து இருத்தல் ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கி, ஒவ்வொரு துணை கோட்டத்திலும் உள்ள போலீஸ் நிலையங்கள் மாதந்தோறும் தேர்வு செய்யப்பட்டு நற்சான்றிதழ் வழங்கப்படும். மாவட்டங்களில் சிறந்த போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும்.

மேற்கு மண்டலம் முழுவதும் போலீசார் பற்றாக்குறை முன்பு அதிக அளவில் இருந்தது. தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீசார் கோவை மண்டலத்துக்கு 1,216 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கோவை மாவட்டத்துக்கு அதிகபட்சமாக 359 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு-243, திருப்பூர்-161, நீலகிரி-169, சேலம்-131, நாமக்கல்-76, தர்மபுரி-47, கிருஷ்ணகிரி-30 என்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் பற்றாக்குறை ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்தில் மொத்த போலீசாரின் எண்ணிக்கை முன்பு 11 ஆயிரமாக இருந்தது. தற்போது 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிக எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

குற்றத்தடுப்பு நடவடிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள் முக்கியமாக விளங்கி வருகிறது. எனவே முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கோவை மண்டலத்தில் இதுவரை 26,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் தனியார் மூலம் 16 ஆயிரமும், போலீஸ் மற்றும் அரசு துறைகள் மூலம் 10,500 கேமராக்களும் பொருத்தப்பட்டு்ள்ளன. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 9 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மண்டலம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை 30 ஆயிரமாக உயர்த்த தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது.

காவல்துறை வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களில் அவர்களே பொருத்தி வருகிறார்கள். இதுவும் குற்றத்தடுப்பு நடவடிக்கைக்கு உதவுகிறது. தனியார் லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி இருந்ததால், 20 ஆயிரம் தேங்காய்களுடன் கடத்தப்பட்ட லாரி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிடிபட்டது. தனியார் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவதை அவர்களே கவனம் செலுத்த வேண்டும்.

மரம் வளர்ப்பதை கல்லூரி மாணவர்களிடம் ஊக்குவிக்க ‘கிரீன்வாரியர்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குண்டர் தடுப்பு சட்டத்தில் கடந்த ஆண்டு 116 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாராய கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் 18 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ரவுடி பட்டியல் தயாரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. முன்பு 1,600 பேர் ரவுடி பட்டியலில் இடம்பெற்று இருந்தனர். தற்போது இதன் எண்ணிக்கை உயர்ந்து 2,653 பேர் ரவுடி பட்டியலில் உள்ளனர். நகை பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 1,500 பேர் இடம்பெற்று இருந்தனர். இதன் எண்ணிக்கையும் 2,123 பேர்ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story