மாவட்டம் முழுவதும், அனுமதியின்றி செயல்பட்ட 19 டாஸ்மாக் பார்களுக்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை


மாவட்டம் முழுவதும், அனுமதியின்றி செயல்பட்ட 19 டாஸ்மாக் பார்களுக்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Sept 2019 4:00 AM IST (Updated: 26 Sept 2019 5:16 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 19 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம், 

தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அனுமதியின்றி சில டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருவதாகவும், இதனால் அரசுக்கு மாதம் பல கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் எத்தனை செயல்பட்டு வருகிறது? சந்து கடைகளில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வேடியப்பன் தலைமையில் மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சேலம் மாநகரில் மரவனேரி, ஜாகீர் கொண்டலாம்பட்டி, திருவாக்கவுண்டனூர் பகுதிகளிலும், புறநகரில் மேட்டூர் ஆர்.எஸ்., வனவாசி, மல்லிகுந்தம், மேச்சேரி, கொளத்தூர், சங்ககிரி, மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, மூலக்கடை, கொங்கணாபுரம், வீரகனூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள 19 டாஸ்மாக் பார்கள் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பார்களை அதிகாரிகள் அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.

மேலும், அனுமதியின்றி பார்களை நடத்திய 19 பேர் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வேடியப்பன் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 211 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 40 கடைகளில் மட்டுமே பார் வசதி உள்ளது. ஆனால் சில டாஸ்மாக் கடைகளில் அரசு அனுமதி பெறாமல் பார்கள் செயல்பட்டு வருவதாக புகார் வந்தது. அதன்பேரில் கலால், மதுவிலக்கு பிரிவு போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் என 4 குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டோம்.

இதில், 19 டாஸ்மாக் கடைகளில் அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனால் அவற்றை பூட்டி சீல் வைத்து, பார்கள் நடத்தியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சந்துக்கடைகளை நடத்தி அங்கு டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு அனுமதியின்றி பார்கள் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story