தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் அனுமதி


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் அனுமதி
x
தினத்தந்தி 27 Sept 2019 4:30 AM IST (Updated: 27 Sept 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 28 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நீடாமங்கலத்தை சேர்ந்த வினோத்(22), ஒரத்தநாட்டை சேர்ந்த அந்தோணிசெல்லமேரி, காயத்ரி, வெங்கடேஷ் ஆகியோர் ஆவர். இவர்களை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

டெங்குகாய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதாலிங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாரதி, நிலைய மருத்துவ அதிகாரி செல்வம் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் முதல்வர் குமுதா லிங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “தஞ்சை மருத்துவக்கல்லூரியில் டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கான பகுதியில் 18 படுக்கைகளும், பெண்களுக்கான பகுதியில் 20 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு படுக்கையிலும் கொசுவலைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தனி வார்டில் உள்ள அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலைகள் பொருத்தப்பட்டுள்ளன.

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கஞ்சி, நிலவேம்பு கசாயம், வெந்நீர் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.

இதற்காக டாக்டர்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி வார்டில் 24 மணிநேரமும் செவிலியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.


Next Story