சேரம்பாடி அருகே, முதியவரை குத்திக்கொன்ற தொழிலாளி கைது


சேரம்பாடி அருகே, முதியவரை குத்திக்கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 26 Sep 2019 10:15 PM GMT (Updated: 26 Sep 2019 7:14 PM GMT)

சேரம்பாடி அருகே முதியவரை குத்திக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் வீரபுத்திரன்(வயது 75). இவர் கோரஞ்சால் பகுதியில் உள்ள அரசு மதுக்கடை அருகில் குடிநீர் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு குடிநீர் வாங்க சிலர் அங்கு சென்றனர். அப்போது கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் வீரபுத்திரன் பிணமாக கிடந்தார். உடனே அவர்கள் சேரம்பாடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் கொலை நடந்த இடத்தில் தடயங்கள் ஏதாவது கிடைக்குமா? என போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து சுமார் 30 அடி தொலைவில் உள்ள கிணற்றுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. உடனே போலீசார் அங்கு சென்று கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். அப்போது வாலிபர் ஒருவர் தண்ணீரில் தத்தளிப்பது தெரியவந்தது. பின்னர் டார்ச் லைட்டுகள் உதவியுடன் வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டு, கிணற்றுக்குள் கிடந்த வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் வெளியே கொண்டு வந்தனர். விசாரணையில் அவர் நாயக்கன்சோலையை சேர்ந்த அருண்குமார்(28) என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டு இருந்ததால், பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின்போது, ‘வீரபுத்திரனை அடையாளம் தெரியாத 2 பேர் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர், அவர்களை பிடிக்க முயன்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டேன்‘ என்று கூறி அவர் போலீசாரிடம் நாடகமாடினார். எனினும் ்அந்த வார்த்தைகளில் சந்தேகம் எழுந்ததால், அருண்குமாரை சேரம்பாடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வீரபுத்திரனை பாட்டிலால் குத்தி கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இதுகுறித்து போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

ஒரு கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துவிட்டு காலி பாட்டிலுடன் கோரஞ்சால் பகுதியில் நடந்து வந்தேன். அப்போது அங்கு வீரபுத்திரன் குடிநீர் விற்பனை செய்து கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும், ஏன் தம்பி குடிநீர் வாங்க வில்லையா? என்று கேட்டார். இல்லை என்று நான் பதில் அளித்தேன். அதற்கு பணம் இருந்தால் வேறு கடையில் குடிநீர் வாங்குகிறாய், இல்லாவிட்டால் கடனுக்கு என்னிடம் குடிநீர் வாங்குகிறாய் என்று கூறினார். இதனால் அவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆத்திரம் அடைந்த நான், கீழே கிடந்த காலி மதுபாட்டிலை உடைத்து வீரபுத்திரனின் கழுத்தில் குத்தினேன். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டார். அங்கிருந்து தப்பி ஓடியபோது கிணற்றுக்குள் விழுந்து விட்டேன். இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறி உள்ளார். இதையடுத்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

Next Story