மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் சீரமைப்பு பணி


மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் சீரமைப்பு பணி
x
தினத்தந்தி 27 Sept 2019 4:45 AM IST (Updated: 27 Sept 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் சீரமைப்பு பணி நடந்தது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சீன அதிபர் ஜின்பிங்-இந்திய பிரதமர் நரேந்திரமோடி இருவரும் வருகிற அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் சந்தித்து பேசுகின்றனர். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, போன்ற பாரம்பரிய நினைவு சின்னங்களை இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்க்க உள்ளனர்.

நேற்று் மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் சீனஅதிபர் ஜின்பிங்-மோடி நடந்து செல்லும் கிரானைட் கற்களால் புல்வெளி பாதையை சுற்றி நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட பசுமை புல் தரையில் நடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. கடற்கரை கோவிலில் படிந்துள்ள உப்பு படிமங்களை அகற்றி அங்குள்ள சிற்பங்களை ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணியும் நடந்து வருகிறது.

அதேபோல் வெண்ணை உருண்டை பாறை பகுதி முழுவதும் பசுமை புல்வெளிகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சீனர்கள் பவுத்த மதத்தை தழுவி வழிபடுபவர்கள் என்பதால் சீன அதிபரை மகிழ்விக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் இரு யானைகளுடன் புத்தர் அமர்ந்திருப்பது போன்று கற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை கோவிலின் கருவறைக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் காஷ்மீர் பிரச்சினையில் பழிவாங்க திட்டமிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சர்வதேச உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து மாமல்லபுரத்தில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் புராதன மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உளவுபிரிவு போலீசாரும் சாதாரண உடையில் கண்காணித்து வருகின்றனர்.

மாமல்லபுரத்தில் இன்னும் ஒரு சில தினங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இரு நாட்டு தலைவர்களை கவரும் வகையில் புராதன மையங்கள் அனைத்தும் அழகுற காட்சி அளிக்கும் என்று தொல்லியல் துறை, பேரூராட்சி துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story