சேலம் மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்
சேலம் மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்,
சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் செல்போன், கஞ்சா, பீடி, சிகரெட் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இதனால் மாநகர போலீசார் மற்றும் சிறை வார்டன்கள் அடிக்கடி சிறையில் சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
இந்தநிலையில், சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் உத்தரவுப்படி நேற்று முன்தினம் வார்டன்கள் மற்றும் போலீசார் சிறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 8-வது பிளாக்கில் சோதனை செய்தபோது, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஸ்தபா என்பவரின் செருப்பு அறுந்த நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரது செருப்பை சோதனை செய்தபோது, அதில் 10 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கைதி முஸ்தபாவிற்கு கஞ்சா கொடுத்த நபர்கள் யார்? சிறைத்துறை அதிகாரிகள் உதவி புரிந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story