தாராபுரம் அருகே புதிதாக அமைய உள்ள இரும்பு உருக்கு ஆலைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு - கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு
தாராபுரம் அருகே புதிதாக அமைய உள்ள இரும்பு உருக்கு ஆலைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வடுகபாளையத்தில் தனியார் நிறுவனம் ஒன்று இரும்பு உருக்கு மற்றும் உருட்டு ஆலை அமைக்க உள்ளது. இது தொடர்பாக இந்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1996-ன் கீழ் வெளியிடப்பட்ட, 2006-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் நேற்று தாராபுரத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சப்-கலெக்டர் பவன்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் வனஜா, உதவி பொறியாளர்கள் வினோத்குமார், கார்த்திக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் பேசும்போது, உருக்கு ஆலை அமைப்பது குறித்து, பொதுமக்கள் நேரிலும், விண்ணப்பங்கள் மூலமாகவும் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டார். அதையடுத்து தனியார் உருக்கு ஆலை நிறுவனத்தின் சார்பில் ஆலையின் வரைபடம், உருக்கு ஆலையின் செயல்பாடுகள், அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள், விவசாய அமைப்பினர், அரசியல் கட்சியினர் ஆகியோர் தங்களது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தார்கள். அதில் பெரும்பாலானோர் உருக்கு ஆலை அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தார்கள். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் சுற்றுச்சூழல் பொறியாளர் சண்முகம் பேசும் போது இந்த கூட்டத்தின் அறிக்கை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதால், உருக்கு ஆலை அமைப்பதால், இந்த பகுதியில் சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை பற்றி தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர், இந்த கருத்து கேட்பு கூட்டத்தை, உருக்கு ஆலை அமைக்கப்படும் வடுகபாளையத்தில் நடத்தாமல், தாராபுரத்தில் நடத்த காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் வடுகபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களிடம், நேரடியாக கருத்து கேட்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள். இறுதியில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
Related Tags :
Next Story