திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்பு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த வாலிபர் காயமின்றி உயிர் தப்பினார்


திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்பு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த வாலிபர்  காயமின்றி உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 27 Sept 2019 4:30 AM IST (Updated: 27 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்பு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த வாலிபர் பஸ் மீது விழுந்து காயமின்றி உயிர் தப்பினார். இது பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூர், 

திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்புறம் மேம்பாலம் உள்ளது. நேற்று முன்தினம் காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இந்த மேம்பாலத்தின் மேல் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று அந்த வாலிபர் பாலத்தின் கைப்பிடி சுவரில் ஏறி நின்று கம்பியை பிடித்தபடி கீழே குதிக்க தயாராக நின்று கொண்டிருந்தார்.

இதை பாலத்துக்கு கீழ் சென்றவர்கள் பார்த்து கீழே குதிக்க வேண்டாம் என்று வாலிபரை நோக்கி சத்தம் போட்டனர். அப்போது பாலத்துக்கு கீழ் சென்ற ஒரு டவுன் பஸ்சின் மேல்பகுதியில் அந்த வாலிபர் குதித்தார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனால் அந்த வாலிபர் பஸ்சில் இருந்து உருண்டு கீழே ரோட்டில் விழுந்தார்.

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச்சென்று அந்த வாலிபரை தூக்கினார்கள். பின்னர் எதுவும் நடக்காதது போல் அந்த வாலிபர் அங்கிருந்து நடந்து சென்றார். இதன் காரணமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில் அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார். அவர் வைத்திருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது உறவினர் ஒருவர் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் அவருடன் அந்த வாலிபரை போலீசார் அனுப்பிவைத்தனர். எதற்காக அந்த வாலிபர் பாலத்தின் மேல் இருந்து கீழே குதித்தார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story