மொடக்குறிச்சி அருகே, ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
மொடக்குறிச்சி அருகே ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மொடக்குறிச்சி,
மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் உள்ள ஈரோடு- முத்தூர் ரோட்டில் ஏராளமான கடைகள் இருக்கின்றன. இதில் பலர் ரோடுகளை ஆக்கிரமித்து சுவர், பந்தல், விளம்பர பலகைகள் அமைத்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதனால் எழுமாத்தூரில் உள்ள ஈரோடு- முத்தூர் ரோடு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் அளவீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரோட்டை ஆக்கிரமித்து உள்ளவர்கள் தங்களுடைய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சுவர், பந்தல் மற்றும் விளம்பர பலகைகளை பல கடை உரிமையாளர்கள் தாங்களாகவே இடித்து அகற்றி அப்புறப்படுத்தினர். எனினும் சிலர் தங்களுடைய ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஈரோடு கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் வி.நடராஜன், இளநிலை பொறியாளர் சாமியப்பன், கொடுமுடி கோட்ட உதவி செயற்பொறியாளர் ரத்தினசாமி மற்றும் ஊழியர்கள் எழுமாத்தூருக்கு பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். இதன்காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையொட்டி அசம்பாவிதம் சம்பவம் நடைபெறாமல் தடுக்க அந்த பகுதியில் மொடக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story