பிளக்ஸ் பேனர்’ வைக்க தடை விதித்தது போன்று சுவரொட்டிகள் ஒட்டுவதையும் முறைப்படுத்த வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி
‘பிளக்ஸ் பேனர்’ வைக்க தடை விதித்தது போன்று சுவரொட்டிகள் ஒட்டுவதையும் முறைப்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
ஈரோடு,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் ஈரோடு வில்லரசம்பட்டியில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் 11-வது செயற்குழு கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் ஆலோசிக்கப்பட உள்ளன.
தமிழர் பெருமைகளை உலகுக்கு எடுத்துச்செல்லும் வகையில் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் உருவாக்க வேண்டும். மத்திய -மாநில அரசுகள் இதற்கு நிதி உதவி வழங்கி தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகமாக அதனை உருவாக்க வேண்டும். நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி, பல்வேறு விதமான கோரிக்கைகளை மத்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வைத்து வருகிறது. இந்தநிலையில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்ததாக உறுதி செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுத்து இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது நீட் தேர்வு மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி இருக்கிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வெற்றிக்கு த.மா.கா. பணியாற்றும். மக்களின் அன்றாட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை உயர்வை மத்திய-மாநில அரசுகள் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் இந்தியை கட்டாய மொழியாக அனுமதிக்கவே கூடாது.
‘பிளக்ஸ் பேனர்’கள் வைப்பதில் எப்போதும் எனக்கு உடன்பாடு கிடையாது. பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதித்தது போன்று, சுவரொட்டிகள் ஒட்டுவதிலும் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டும். இதனால் பிளக்ஸ், சுவரொட்டி தொழிலில் இருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க வேண்டும். சுவரொட்டிகளை அனைத்து கட்சியினரும் ஒட்டுகிறார்கள். இதை தடை செய்ய முடியாது. எனவே சுவரொட்டிகள் ஒட்ட சில இடங்களை அரசு அடையாளப்படுத்த வேண்டும். சாலையோரத்தில் இருக்கும் அனைத்து சுவர்களிலும் சுவரொட்டிகள் ஒட்டுவதும், பின்னர் அதை சுரண்டுவதும் தொடர்கிறது. இதை தடுக்க பாலங்களில் உள்ள தூண்களில் விளம்பரம் செய்யவும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். பேட்டியின் போது இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா, மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மத்திய மாவட்ட தலைவர் ரமேஷ், தெற்கு மாவட்ட தலைவர் ஜெகதீஷ் குமார், வடக்கு மாவட்ட தலைவர் விஜேய், நெசவாளர் அணி தலைவர் ராஜேஸ் உள்பட பலர் இருந்தனர்.
தொடர்ந்து நடந்த செயற்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளை த.மா.கா. இளைஞர் அணி சார்பில் மாவட்டந்தோறும் சிறப்பாக கொண்டாடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story