ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்டு டேனிஸ் ஆஜர்
ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்டு டேனிஸ் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஊட்டி,
கேரள மாநிலம் அகழி என்ற இடத்தில் மாவோயிஸ்டு இயக்கத்திற்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் பழங்குடியின மக்களிடம் பேசியதாக கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியை சேர்ந்த டேனிஸ் என்ற கிருஷ்ணா(வயது 31) என்பவரை கேரள போலீசார் கடந்த ஆண்டு கைது செய்து திருச்சூர் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நெடுகல்கொம்பை கிராமத்தில் மாவோயிஸ்டுகள் புகுந்து அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து கொலக்கம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கில் டேனிசுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கொலக்கம்பை போலீசார் ஊட்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து கோர்ட்டில் வாரண்டு பெறப்பட்டு கேரளா போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி கேரள போலீசார் டேனிசை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. கடந்த மாதம் 30-ந் தேதி கேரள போலீசார் திருச்சூர் கோர்ட்டில் அனுமதி பெற்று, கோவை மத்திய சிறையில் இருந்து டேனிசை திருச்சூர் சிறைக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் ஊட்டி கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. திருச்சூர் சிறையில் இருந்து டேனிசை கேரள போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கி ஏந்தி பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை எதாவது தெரிவிக்க விரும்புகிறீர்களா? என்று டேனிசிடம் கேட்டார். அதற்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது வக்கீல் விஜயன் 10 நிமிடம் டேனிசிடம் பேச அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் கோர்ட்டுக்குள் 10 நிமிடம் பேச அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம்(அக்டோபர்) 25-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் கேரள போலீசார் டேனிசை பாதுகாப்புடன் திருச்சூர் சிறைக்கு கொண்டு சென்றார்கள்.
இதற்கிடையே ஊட்டி கோர்ட்டில் டேனிஸ் ஆஜராக வந்தபோதும், வெளியே சென்றபோதும் ‘நில ஆக்கிரமிப்பை அரசு கண்டுகொள்வது இல்லை, மேலும் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள்‘ என்று கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story