விருதம்பட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் - கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


விருதம்பட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் - கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Sept 2019 3:45 AM IST (Updated: 27 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

விருதம்பட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளுடன், கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 

வேலூரில் இருந்து காட்பாடிக்கு செல்லும் சாலையில் விருதம்பட்டு, சில்க் மில் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து ஓடைப்பிள்ளையார் கோவில் வரை சாலையின் இடதுபுறம் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் சிலர் சாலையை ஆக்கிரமித்து தள கற்களை கொண்டு சாலைகள் அமைத்திருந்தனர். மேலும் விளம்பர பலகைகள், தற்காலிக கடைகள், தள்ளுவண்டி கடைகளும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறைக்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். பின்னர் சாலையை ஆக்கிரமித்து தள கற்களை கொண்டு போடப்பட்ட சாலையை பெயர்த்து ஆக்கிரமிப்பை அகற்றினர். மேலும் அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தற்காலிக கடைகளும் அகற்றப்பட்டன. அப்போது சில கடை உரிமையாளர்கள் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அசம்பாவிதம், பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

சாலையை பெயர்த்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது கடை உரிமையாளர்கள் சிலர் அங்கு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைடுத்து போலீசார் கடையின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

பின்னர் அதிகாரிகள், கடை உரிமையாளர்களிடம் கூறுகையில், ‘ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்றனர். அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story