நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த 2½ வயது பெண் குழந்தை சாவு


நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த 2½ வயது பெண் குழந்தை சாவு
x
தினத்தந்தி 27 Sept 2019 3:34 AM IST (Updated: 27 Sept 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த 2½ வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

நெல்லை,

நெல்லை பேட்டையை சேர்ந்தவர் அசன்மைதீன். இவர், கோவையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு செரீனா (வயது 4), ஆத்திபா (2½) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன. அசன்மைதீன் காலாண்டு விடுமுறையையொட்டி தனது குடும்பத்துடன் நெல்லையை அடுத்த சுத்தமல்லி ஜீவா நகரில் உள்ள தனது சகோதரர் சாகுல் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார். நேற்று மதியம் அசன்மைதீன் குடும்பத்துடன் நெல்லையை அடுத்த கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள தாமிரபரணி சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு சென்றார். அங்கு தனது 2 குழந்தைகளையும் மடியில் வைத்து அசன்மைதீன் குளிப்பாட்டிக் கொண்டு இருந்தார்.

அப்போது ஆத்திபா தந்தை மடியில் இருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்தாள். அவள் தண்ணீரில் மூழ்கினாள். தகவல் அறிந்த பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், ஆத்திபாவை மீட்டு நடுக்கல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கி சென்றனர். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story