மாவட்டம் முழுவதும், ஒரே நாளில் 4,262 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் - போலீசார் நடவடிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் ஒரே நாளில் 4,262 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்,
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளபடி சமீப காலமாக தமிழகம் முழுவதும் போலீசார் போக்குவரத்து விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்திலும், வாகன சோதனை செய்து போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிவு செய்ய மாவட்ட போலீஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போலீசார் சட்டம், ஒழுங்கு பணிகளை விட வாகன சோதனையில் தான் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 4,262 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அதிகமாக வாகனம் ஓட்டியதாக 2 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதாக 4 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 46 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1,711 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றதாக 306 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக 728 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் அதிக பாரம் ஏற்றி சென்ற 88 லாரி ஓட்டுனர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 69 பேர் மீதும் போக்குவரத்து விதிமீறலுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களையும் சேர்த்து மொத்தம் ஒரே நாளில் 4,262 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 92 ஆயிரத்து 300 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story