தேவகோட்டை நர்சுடன் ‘டிக்-டாக்’ மூலம் பழகிய தோழியை பிடிக்க விரைந்த போலீசார்
‘டிக்-டாக்’ மூலம் தேவகோட்டையை சேர்ந்த நர்சுடன் பழகி, அவரின் நகையை வாங்கிக்கொண்டதாக எழுந்த புகார் தொடர்பாக தோழியை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் வினிதா (வயது 20). நர்சு. இவருக்கும் காளையார்கோவில் அருகே உள்ள சானாஊரணியைச் சேர்ந்த ஆரோக்கிய லியோ (25) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.
ஆரோக்கிய லியோ கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் அவரது மனைவி வினிதா மட்டும் ஊரில் இருந்தார். அவருக்கும், திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுக்கும் டிக்-டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நகையை எடுத்துக்கொண்டு தோழி அபியுடன், நர்சு வினிதா மாயமானதாக எழுந்த விவகாரம் திடீர் சர்ச்சையானது. போலீசார் அவர்களை தேடுவதை அறிந்து போலீசில் நர்சு வினிதா ஆஜராகி விளக்கம் அளித்தார்.
விசாரணையில், வினிதா 20 பவுன் நகையை எடுத்துச் சென்றதும், அவரது தோழி அபி திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் நடனம் ஆடுபவர் என்றும் தெரியவந்தது.
தோழியை பிடிக்க சென்ற போலீஸ்
இந்தநிலையில் நேற்று மீண்டும் வினிதாவிடம் தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வினிதா போலீசாரிடம் கூறியதாவது:-
நான் சிவகங்கை போலீசில் ஆஜராக வந்த போது தோழிகள் அபி, சரண்யா ஆகிய 2 பேரும் என்னுடன் வந்தனர். ஆனால் அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு வராமல் விட்டுச் சென்றனர். இதையடுத்து நான் மட்டும் ஆஜரானேன். நான் அபியிடம் 20 பவுன் நகையை கொடுத்தேன். அதற்கு முன்பு எனது பிறந்த நாள் அன்று அபி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து, 1½ பவுன் தங்க மோதிரத்தை பரிசளித்தார். இது போல் மேலும் பல்வேறு பரிசுகளை எனக்கு அபி வழங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தேவகோட்டை போலீசார் அபியின் போனில் தொடர்பு கொண்டபோது, வினிதாவின் நகைகள் குறித்து அவர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசி போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து வினிதாவின் தோழி அபியை பிடித்து விசாரணை நடத்தினால் இது குறித்து கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவரை பிடிக்க திருவாரூர் மாவட்டத்துக்கு தேவகோட்டை தாலுகா போலீசார் விரைந்துள்ளனர். மேலும் வினிதா, அவருடைய தயார் அருள் ஜெயராணி, கணவர் ஆரோக்கிய லியோ ஆகியோரையும் போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
Related Tags :
Next Story