முறைகேடு புகாரால் பரிவர்த்தனை முடக்கம்: பி.எம்.சி. வங்கி மீது வாடிக்கையாளர்கள் போலீசில் புகார்
பி.எம்.சி. வங்கியின் முறைகேடுகள் குறித்து வாடிக்கையாளர்கள் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார் அளித்தனர். சயான் போலீஸ் நிலையம் முன்பு வாடிக்கையாளர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பையை தலைமையிடமாக கொண்டு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு(பி.எம்.சி.) வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பல்வேறு முறைகேடு கள் நடந்ததாக வந்த புகாரை அடுத்து ரிசர்வ் வங்கி, பி.எம்.சி. வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளையும் 6 மாதத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.1,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டனர். வங்கியின் செயல்பாடுகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சயானில் உள்ள வங்கி கிளை முன்பு 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நேற்று திரண்டனர். அவர்கள் தாங்கள் டெபாசிட் செய்த பணத்தை தரும்படியும், ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷம் போட்டனர்.
அப்போது அவர்கள், உயர் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் கோர்ட்டையும் அணுக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அவர்கள் தொடர்ந்து கோஷம் போட்டு கொண்டு இருந்ததால் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை சமரசப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே சயான் போலீஸ் நிலையத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்தனர். அவர்கள் ஊழலில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார் அளித்தனர்.
இதேபோல முன்னாள் எம்.பி. கிரித் சோமையா பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வங்கி வாடிக்கையாளர்களின் ரூ.8 ஆயிரம் கோடியில் எச்.டி.ஐ.எல். என்ற ரியல் எஸ்டே் நிறுவனத்துக்கு பினாமி பெயரில் ரூ.3 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோசடியை தொடர்ந்து, 9 லட்சத்து 12 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே வங்கி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
‘வாடிக்கையாளர்கள் ரூ.10 ஆயிரம் எடுக்கலாம்’ - ரிசர்வ் வங்கி அனுமதி
முறைகேடு புகாரை தொடர்ந்து பரிவர்த்தனை முடக்கப்பட்டதால் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு(பி.எம்.சி.) வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இதில் வாடிக்கையாளர்கள் ரூ.1000 மட்டுமே தங்கள் கணக்கில் இருந்து எடுக்க முடியும் என்பதும் ஒன்று. இதனால் வாடிக்கையாளர்கள் கொந்தளித்தனர். தாங்கள் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க முடியாவிட்டால் எப்படி என்று ஆவேசம் அடைந்தனர்.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் 6 மாதத்துக்குள் ரூ.10 ஆயிரம் வரை எடுத்து கொள்ளலாம் என்று நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இது சேமிப்பு, நடப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பு வங்கி கணக்குதாரர்களுக்கும் பொருந்தும். இந்த அறிவிப்பு காரணமாக 60 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களது முழு பணத்தையும் எடுத்து கொள்ள முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு பி.ம்.சி. வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Related Tags :
Next Story