குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Sep 2019 10:15 PM GMT (Updated: 26 Sep 2019 11:21 PM GMT)

தனித்தனி சம்பவத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்,

விருத்தாசலம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி ரத்னா (வயது 34). கடந்த ஜனவரி மாதம் சிவக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், அருணா ஆகியோர் ஜாமீனில் விடுதலையாகி வெளியில் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி காலை 8 மணிக்கு ரத்னா காய்கறிகள் வாங்குவதற்காக விருத்தாசலம் மார்க்கெட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அவரை அருணா வழிமறித்து ஆபாசமாக திட்டி, கோர்ட்டில் எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ரத்னா கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் பணிபூண்டார் தெருவை சேர்ந்த அருணாவை(34) கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். இதையடுத்து அருணாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அருணாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதன்படி அருணாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது கைது செய்தார்.

இதேப்போல் மற்றொரு சம்பவத்தில் வழிப்பறி கொள்ளையனை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

சிதம்பரம் அம்மா பேட்டை வள்ளலார் நகரை சேர்ந்தவர் பாலமுருகன்(47). கடந்த 11-ந்தேதி இவர் தனது நண்பர்களுடன் புவனகிரிக்கு சென்றார். அங்குள்ள காமராஜர் சிலை அருகில் அவர்கள் ஆட்டோவுக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்த ராபின்குமார்(26) என்பவர் அரிவாளை காட்டி பாலமுருகனை மிரட்டி, அவரிடம் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றார்

இது தொடர்பாக பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப்பதிவு செய்து ராபின்குமாரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். இவரது பெயர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகள் பதிவேட்டில் உள்ளதால், இவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தார். அதன்பேரில் கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவுப்படி ராபின்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் கைது செய்தார். 

Next Story