திருக்கோவிலூர் அருகே, ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
திருக்கோவிலூர் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் வீரப்பாண்டி காலனி மாட்டான்தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு திருமணமாகி லதா என்கிற மனைவியும், சினேகா (வயது 18), புவனேஸ்வரி (15), சத்தியா(12) ஆகிய 3 மகள்களும், விஜய் (9) என்கிற மகனும் உள்ளனர். இதில் விஜய் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் விஜய் நேற்று முன்தினம் தனது நண்பர்களோடு விளையாட செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றான்.
ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவன் வீட்டுக்கு வரவில்லை. அவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் அவன் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை விஜய் அங்குள்ள புலிக்கல் ஏரியில் பிணமாக கிடந்தான். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவனது பெற்றோர் மற்றும் அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே விஜய் பெற்றோரும் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்து கிடந்த அவனது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், விளையாடிய போது புலிக்கல் ஏரிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி விஜய் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவனது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனது உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது பற்றி அவனது தாய் லதா அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Related Tags :
Next Story