கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்குவது பற்றி அரசுக்கு பரிந்துரை - சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் உறுதி


கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்குவது பற்றி அரசுக்கு பரிந்துரை - சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் உறுதி
x
தினத்தந்தி 27 Sept 2019 4:00 AM IST (Updated: 27 Sept 2019 5:14 AM IST)
t-max-icont-min-icon

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்குவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் தோப்பு வெங்கடா சலம் உறுதி அளித்தார்.

கடலூர், 

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழுவினர், அதன் தலைவர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் நேற்று கடலூர் மாவட்டத்துக்கு ஆய்வுக்காக வந்திருந்தனர். இந்த குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.ராஜேந்திரன்(பர்கூர்), கருணாநிதி(பல்லாவரம்), ஆர்.காந்தி(ராணிபேட்டை), வி.எஸ்.காளிமுத்து(தாராபுரம்), சத்யா பன்னீர்செல்வம்(பண்ருட்டி), பெரியபுள்ளான் என்ற செல்வம்(மேலூர்), எம்.கே.மோகன் (அண்ணா நகர்), பொன்முடி(திருக்கோவிலூர்) ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் அதிகாரிகள் வரவேற்றனர். இதன்பிறகு மதிப்பீட்டுக்குழுவினர் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் பண்ருட்டியில் ரூ.3 கோடியே 20 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்களையும், மணம்தவிழ்ந்த புத்தூரில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நெய்வேலி அரசு தோட்டக்கலை பண்ணையை பார்வையிட்டனர். அங்கு காய்கறி கண்காட்சியை பார்த்தனர். அங்கு பனை விதைகளையும், பலா செடிகளையும் நட்டனர். இதன்பிறகு சேராக்குப்பம் அய்யன் ஏரியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும், கோதண்டராமபுரத்தில் ரூ.93 ஆயிரம் மதிப்பில் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டனர்.

இதன்பிறகு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலையில் சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. பேசும் போது, கடலூர் மாவட்டத்தில் அதிகாரிகள் அளித்துள்ள புள்ளிவிவரப்படி நெல்சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது ஆனால் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து உள்ளது. இதற்கு இங்கு 2 சர்க்கரை ஆலைகள் மூடிக்கிடப்பதும், விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் பணம் கொடுக்காமல் நிலுவையில் உள்ளதும் தான் காரணமா?

கலெக்டர்:- அம்பிகா சர்க்கரை ஆலையில் வரி வருவாய் வசூல் சட்டப்படி 90 ஆயிரம் டன் சர்க்கரையை விற்று விவசாயிகளுக்கு 26 கோடி ரூபாய் வழங்கி உள்ளோம். இன்னும் 35 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. இது தவிர 6404 மெட்ரிக் டன் சர்க்கரை பாகு விற்க ஏற்பாடு செய்து உள்ளோம். இதன் மூலம் 6 கோடி ரூபாய் கிடைக்கும், இதில் 80 சதவீதம் விவசாயிகளுக்கும், 20 சதவீதம் தொழிலாளர்களுக்கும் வருகிற தீபாவளி பண்டிகைக்குள் கொடுத்து விடுவோம்.

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்:- நீங்கள் ஓடாத சர்க்கரை ஆலைக்கு பதில் சொல்கிறீர்கள், ஓடுகிற சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையிலையே ஒரு வருடமாக விவசாயிகளுக்கு பாக்கித்தொகை வழங்கப்படாமல் இருக்கிறதே,

தனி அதிகாரி ஆதவன் குறள்:-அரசுக்கு பரிந்துரை அனுப்பி உள்ளோம் நிதித்துறையில் கோப்பு உள்ளது.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்:-இதே பதிலைத்தான் ஒரு வருடமாக சொல்கிறீர்கள், எனக்கே 25 லட்சம் ரூபாய் பாக்கி வைத்து உள்ளர்கள்.

தனி அதிகாரி:-வருகிற அக்டோபர் மாதத்துக்குள் கொடுத்து விடுவோம்.

தோப்பு வெங்கடாச்சலம்:-கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்குவது பற்றிய விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. எனவே இது தொடர்பாக உரிய குறிப்பாணைகள் மதிப்பீட்டுக்குழு மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த கூட்டத்தில் மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கணேசன், சபா.ராஜேந்திரன், துரை.கி. சரவணன், தலைமை செயலக இணைச்செயலாளர் அய்யம்பெருமாள், துணைச்செயலாளர் சிவகுமரன், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ராஜகோபால் சுங்கரா, கிராம பஞ்சாயத்துகள் உதவி இயக்குனர் ஆனந்த், வேளாண்மை இணைஇயக்குனர் முருகன், தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜாமணி, உதவி இயக்குனர்கள் பூவராகவன், பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்பிறகு தோப்பு வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலமாக செய்யப்பட்டுள்ள பணிகள், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா? என்று ஆய்வு செய்தோம். இதுதொடர்பாக உரிய குறிப்பாணைகள் அரசுக்கு மதிப்பீட்டுக்குழு மூலமாக அனுப்பி வைக்கப்படும். நாளை(அதாவது இன்று) திருவண்ணாமலையில் மதிப்பீட்டு குழு ஆய்வு செய்ய உள்ளது. கடலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் மிகச்சிறப்பான பணிகள் நடைபெற்று உள்ளது. தோட்டக்கலைத்துறையும் மிகச்சிறப்பாக இயங்குகிறது.

முதல்-அமைச்சரின் பொதுப்பணித்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அய்யனேரி குளத்தில் தனியார் பங்களிப்போடு குளம் தூர்வாரும் பணியை மிகச்சிறப்பாக மேற்கொண்டு இருக்கிறார்கள். பருவமழைக்கு முன்னதாக குடிமராமத்து பணிகளை முடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். எல்லா கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க வேண்டும் என்ற அறிவுரை வழங்கியிருக்கிறோம்

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வராததற்கு அரசியல் காரணம் இல்லை. சத்யா பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. எங்களோடு ஆய்வுக்கு வந்திருந்தார். இது அரசு சார்ந்த பணி. இதில் எல்லா கட்சி உறுப்பினர்களும் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story