சட்டசபை இடைத்தேர்தலுக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு மந்திரி ஈசுவரப்பா வரவேற்பு


சட்டசபை இடைத்தேர்தலுக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு மந்திரி ஈசுவரப்பா வரவேற்பு
x

சட்டசபை இடைத்தேர்தலுக்கு தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு மந்திரி ஈசுவரப்பா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

உப்பள்ளி,

கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து உள்ளது. இதனால் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமாரின் உத்தரவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர் பிறப்பித்த உத்தரவு அறைகுறையானது என்றும், இந்த வழக்கை ஆழமாக விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை வரவேற்கிறேன். கர்நாடகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை நாடே பார்த்து கொண்டிருக்கிறது. சித்தராமையா, குமாரசாமி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் இப்போது வெளியே வந்து கொண்டிருக்கிறது.

கூட்டணி கட்சிகளை விட்டு 17 எம்.எல்.ஏ.க்கள் வெளியே வந்தது சரியே என்று இப்போது நினைக்க தோன்றுகிறது. அவர்களுக்கு எங்கள் கட்சியில் உரிய பதவியை வழங்குவோம். சுப்ரீம் கோர்ட்டு வழங்கும் தீர்ப்பே இறுதியானது. இதை அனைவரும் தலைவணங்கி ஏற்க வேண்டும். சித்தராமையா 5 ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தபோது என்ன செய்தார்?.

சித்தராமையாவுக்கு ஆதரவாக பேசினால், நல்ல பதவி கிடைக்கும் என்று நினைத்து ரமேஷ்குமார் பேசுகிறார் போல் தெரிகிறது. காங்கிரசில் கருத்து வேறுபாடு வெடித்துள்ளது அனைவருக்கும் தெரியும். சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்ததால் சித்தராமையாவின் செல்வாக்கு குறைந்து வருகிறது.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார். 

Next Story