கர்நாடகத்தில் அக்டோபர் 21-ந் தேதி நடைபெற இருந்த 15 தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைப்பு


கர்நாடகத்தில் அக்டோபர் 21-ந் தேதி நடைபெற இருந்த 15 தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 27 Sept 2019 5:50 AM IST (Updated: 27 Sept 2019 5:50 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கு அக்டோபர் 21-ந் தேதி நடை பெறுவதாக அறிவிக்கப்பட்ட 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை ஒத்திவைக்க இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

புதுடெல்லி,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, இரு கட்சிகளையும் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

ஆனால் அவர்களுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்த சபாநாயகர் ரமேஷ்குமார், அவர்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். அத்துடன், தற்போதைய சட்டசபையின் பதவி காலம் முடியும் அவரை அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவித்தார்.

இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து அங்கு எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதா அரசு அமைந்தது.

இதற்கிடையே, சபா நாயகரின் நடவடிக்கைக்கு எதிராக தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில், 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், காலியாக உள்ள 17 சட்டசபை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த 21-ந் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது. (2 சட்டசபை தொகுதிகள் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை)

இதைத்தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தொடர்ந்தனர். இவர்களில் 12 பேர் காங்கிரசையும், 3 பேர் ஜனதா தளம்(எஸ்) கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தங்களை இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லையேல் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை 15 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

இந்த மனுவை கடந்த 23-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார், கர்நாடக தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கர், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் சித்த ராமையா, தினேஷ் குண்டுராவ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், கர்நாடக சபாநாயகர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்துக்கு எதிரான வழக்கை முழுமையாக விசாரித்து முடிவு செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்தனர்.

உடனே தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி, 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சிறிது காலம் ஒத்திவைக்குமாறு தேர்தல் கமிஷனை தான் கேட்டுக்கொள்ளப்போவதாக கூறினார்.

அவர் இவ்வாறு கூறியதும் நீதிபதிகள், “உங்களுடைய இந்த கருத்தை பதிவு செய்து கொள்ளலாமா?” என்று கேட்டனர்.

அதற்கு அவர், பதிவு செய்து கொள்ளலாம் என்று பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பு மற்றும் சபாநாயகர், தலைமைச் செயலாளர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் இடைத்தேர்தலை ஒத்திவைப்பதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றனர்.

இதேபோல் காங்கிரஸ் தலைவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபலும், இடைத்தேர்தலை ஒத்திவைப்பதில் தங்கள் தரப்புக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை என்று கூறியதோடு, காலியாக உள்ள அந்த தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் 22-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் ஒத்திவைப்பதாக தேர்தல் கமிஷன் வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து இருப்பதால், அதுபற்றிய அறிவிப்பை தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிடும். 

Next Story