கையை இழந்த 3 வயது மகனின் அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும் கலெக்டரிடம், தந்தை மனு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கையை இழந்த 3 வயது மகனின் அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும் என கலெக்டரிடம் தந்தை மனு அளித்தார்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ், தறித்தொழிலாளி. இவர், இடது கையை இழந்த தனது 3 வயது மகனான ஜெயபிரகாசை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர் கலெக்டர் ராமனை சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அதில், தனது மகனுக்கு கையில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் முதல்–அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையும், நிதி உதவியும் கலெக்டர் வழங்கி உதவ வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து வெங்கடேஷ் கூறும் போது, ‘எனது மகன் 11 மாத குழந்தையாக இருந்த போது வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது விசைத்தறி எந்திரத்தில் அவனுடைய இடது கை சிக்கியதால் துண்டானது. இதையடுத்து அவனை சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தேன். தற்போது அவனுடைய கையில் எலும்பு வளர்ச்சி அடைந்துள்ளது.
இதை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்றும், இதற்காக ரூ.20 ஆயிரம் வரை செலவாகும் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர். ஆகையால் நான் வறுமையில் வாடுவதால் எனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முதல்–அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையும், நிதி உதவியும் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்’ என்றார்.
Related Tags :
Next Story