புஞ்சைபுளியம்பட்டியில் கடை உரிமையாளரை திசை திருப்பி ரூ.13 ஆயிரம் அபேஸ்; மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


புஞ்சைபுளியம்பட்டியில் கடை உரிமையாளரை திசை திருப்பி ரூ.13 ஆயிரம் அபேஸ்; மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Sept 2019 4:45 AM IST (Updated: 27 Sept 2019 8:38 PM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டியில் கடை உரிமையாளரை திசை திருப்பி ரூ.13 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் பேரானந்தம் (வயது 37). அங்குள்ள பவானிசாகர் ரோட்டில் குழந்தைகளுக்கான தொட்டில் உள்ளிட்ட பொருட்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பேரானந்தமும், அவருடைய மனைவி சுமதியும் வியாபாரத்தை கவனித்துக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது மாலை 4 மணி அளவில் 4 பெண்களும், ஒரு ஆணும் கடைக்கு வந்தார்கள். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களையும், அதன் விலைகளையும் கேட்டார்கள். சிறிது நேரத்தில் எதுவும் வாங்காமல் சென்று விட்டார்கள்.

அவர்கள் சென்றபின் சிறிது நேரம் கழித்து பேரானந்தம் கடையின் கல்லாவை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.13 ஆயிரத்தை காணவில்லை. பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போட்டு பார்த்தார்.

அதில் பொருட்கள் வாங்க வந்த ஆண் பேரானந்தத்தை திசை திருப்பி கடையின் கல்லாவில் இருந்த பணத்தை நைசாக எடுத்து ஒரு பெண்ணிடம் கொடுப்பது தெரிந்தது.

இதனால் பதறிப்போன பேரானந்தம் வெளியே ஓடிவந்து கடைக்கு வந்த 5 பேரையும் தேடினார். ஆனால் அவர்களை காணவில்லை.

இதைத்தொடர்ந்து இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story