சேவூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் விவசாயியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட்டம்; போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை


சேவூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் விவசாயியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட்டம்; போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை
x
தினத்தந்தி 27 Sep 2019 11:00 PM GMT (Updated: 27 Sep 2019 3:27 PM GMT)

சேவூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் விவசாயியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்கள். சம்பவம் நடந்த இடத்தை போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

சேவூர்,

திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா, சேவூர் அருகே ஆலத்தூரில் புளியம்பட்டி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஆறுமுகம்(வயது 75). விவசாயி. இவருடைய மனைவி ராமாத்தாள்(67). முதியவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.

இவர்களது மகன் கதிர்வேல்(45).சுமார் 100 அடி தூரத்தில் தனது மனைவி, குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் 2 மர்ம ஆசாமிகள் ஆறுமுகத்தின் வீட்டுக்குள் புகுந்தனர்.

திடீரென்று வீட்டுக்குள் சத்தம் கேட்டதை அறிந்த ஆறுமுகமும், ராமாத்தாளும் தூக்கத்தில் இருந்து விழித்தனர். அவர்கள் இருவரும், யாரது? என்று கேட்டப்படியே படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் சுவிட்ச் போட்டு விளக்கை எரிய வைத்தனர்.

அப்போது அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் அங்கு நிற்பதை பார்த்து திடுக்கிட்டனர். திடீரென்று அவர்கள் இருவரும் ராமாத்தாள் அணிந்து இருந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் அவர்களை தடுக்க முயன்றார்.

உடனே கொள்ளையர்கள் 2 பேரும் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை பல இடங்களில் குத்தினார்கள். உடனே ராமாத்தாள் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார்.

கணவரை தாக்கிய போது கொள்ளையர்களை தடுத்த போது ராமாத்தாளின் கையிலும் கத்திக்குத்து விழுந்தது. சத்தம் போட்டதால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

கொள்ளையர்கள் ஆறுமுகத்தின் கை, வயிறு உள்பட 4 இடங்களில் கத்தியால் குத்தினார்கள். இதில் ரத்தம் வெளியேறி வீட்டில் உறைந்து கிடந்தது. இதற்கிடையே சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மகன் கதிர்வேல், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தந்தை ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சேவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் நேற்று காலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வந்து மோப்பம் பிடித்து யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்தில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

சம்பவம் நடந்த இடம் அவினாசியில் இருந்து புளியம்பட்டி செல்லும் சாலை என்பதால் கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பி சென்றார்களா? என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Next Story