சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கிய 75 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல்


சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கிய 75 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Sept 2019 3:45 AM IST (Updated: 27 Sept 2019 10:09 PM IST)
t-max-icont-min-icon

சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு வீட்டில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருந்த 75 கிலோ கடல் குதிரைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வெளியூர்களில் இருந்து கடல் குதிரைகளை கடத்தி வந்து, பதுக்கி வைத்து இருப்பதாக சென்னை பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் சென்னை வடக்கு கடற்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், பாரிமுனை அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள பரூக் (வயது 53) என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அதில் அவரது வீட்டில், 5 மூட்டைகளில் இறந்துபோன கடல் குதிரைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது வீட்டில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 75 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக பரூக்கை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவர் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக கருவாடுகள் என்று கூறி அந்த 5 மூட்டைகளை லாரியில் அனுப்பி வைத்தார். ஆனால் அதில் கடல் குதிரைகள் இருந்தது குறித்து தனக்கு தெரியாது என போலீசாரிடம் கூறினார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சென்னை வடக்கு கடற்கரை போலீசார், கைதான பரூக் மற்றும் அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 75 கிலோ கடல் குதிரைகளை சென்னை தேனாம்பேட்டை வனச்சரகர் மோகனிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறை அதிகாரிகள், அந்த கடல் குதிரைகள் எந்தெந்த ஊர்களில் இருந்து கடத்தி வரப்பட்டது?. அதை பரூக்கிற்கு அனுப்பிய நண்பர் யார்?. கடல் குதிரைகளை எந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வீட்டில் பதுக்கி வைத்து இருந்தனர்? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story